நிலநடுக்கம்… போரால் சீரழிந்த சிரியாவில் வீடுகளை இழந்து 53 லட்சம் பேர் கண்ணீர், நிலைமை மோசம்: ஐ.நா. அமைப்பு வேதனை

டமாஸ்கஸ்,

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 4 நாட்களாக மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.

துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. எனினும், பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்ட பகுதிகளில் பெருத்த சேதம் விளைவித்து உள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பின்னர் 100-க்கும் மேற்பட்ட நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டு உள்ளன. இதன் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின.

இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்தம் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

20-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மீட்பு குழுவினர் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே, சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணியில் தொடர்ந்து இரவும் பகலும் ஈடுபட்டு வருகின்றனர். அதிக குளிர் சூழ்ந்த காலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக, மக்களை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி ஐ.நா. அமைப்பு வெளியிட்டு உள்ள எச்சரிக்கை செய்தியில், துருக்கி மற்றும் சிரியாவில் 8.7 லட்சம் பேருக்கு சூடான உணவு அவசர தேவையாக உள்ளது என தெரிவித்து உள்ளது.

ஐ.நா.வின் சிரியாவுக்கான அகதிகள் அமைப்பின் தூதரக அதிகாரி சிவாங்கா தனபாலா செய்தியாளர்களிடம் கூறும்போது, சிரியா நாட்டில் 53 லட்சம் பேர் வீடுகளை இழந்திருக்க கூடும் என தெரிவித்து உள்ளார்.

அவர் தொடர்ந்து, நாங்கள் பாதுகாப்பு பிரிவிலும் முன்னணியில் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். சிரியா முழுவதும் சமூக மையங்கள், செயற்கைக்கோள் மையங்கள், தேவையான தன்னார்வலர்கள் ஆகியோரை கொண்ட நெட்வொர்க்கை வைத்திருக்கிறோம்.

இவற்றின் உதவியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடிகிறது. அனைத்து வித பாதுகாப்பு தொடர்புடைய விசயங்களுக்கும் ஹாட்லைன்களை அமைத்து இருக்கிறோம். அவற்றை பயன்படுத்தி உதவி தேவைப்படுவோருக்கு வேண்டிய விசயங்களை உடனடியாக ஓடி சென்று செய்து வருகிறோம் என கூறியுள்ளார்.

சிரியாவில் மோசமடைந்த பகுதிகளுக்கு ஐ.நா.வின் அகதிகள் அமைப்பு உடனடியாக சென்று பாதுகாப்பு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது. இதன்படி, கூடாரங்கள், பிளாஸ்டிக் ஷீட்டுகள், குளிர்கால போர்வைகள், விரிப்புகள், குளிர்கால ஆடைகள் உள்ளிட்டவற்றை தேவையான வசதிகளை அளித்து வருகிறது.

இதில், மாற்று திறனாளிகள், முதியவர்கள் மற்றும் பெற்றோரை பிரிந்த குழந்தைகள் ஆகியோர் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நிலநடுக்க பாதிப்புகளால் சாலைகள் சேதமடைந்து உள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் சென்றடைவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

துருக்கியில் அடையாளம் தெரியாதவர்களின் டிஜிட்டல் புகைப்படங்களை சிறப்பு மென்பொருளில் பதிவேற்றி அவற்றின் உதவியால் நபர்களை அடையாளம் கண்டறியும் பணியும் நடந்து வருகிறது.

துருக்கியில் மீட்பு பணியில் சில பலன்கள் ஏற்பட்டு உள்ளன. ஆனால், சிரியாவில் அதற்கான நம்பிக்கை குறைந்து காணப்படுகிறது. நீண்டகால உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சிரியா நாட்டின் வடமேற்கு பகுதியில் உதவி தேவைப்படுவோருக்கு நிவாரணங்கள் சென்றடைவது பாதிக்கப்பட்டு உளளது.

அரசு அந்த பகுதிகளுக்கு நிவாரண உதவி கொண்டு செல்ல அனுமதி அளித்தபோதிலும், அதற்கான காலவரைக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இது நிலைமையை மோசமடைய செய்துள்ளது. பொருளாதார பாதிப்புகள், கொரோனா, குளிர்காலம் என்ற தொடர் பாதிப்புகளுக்கு இடையே நிவாரண உதவிகளை அவர்களுக்கு சென்றடைய செய்வதில் சுணக்கம் காணப்படுகிறது.

போரால், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்னரே 68 லட்சம் பேர் உள்நாட்டில் புலம்பெயர்ந்து உள்ளனர். நிலநடுக்க பாதிப்புகளை முன்னிட்டு சிவாங்கா அடுத்த வாரம் சிரியாவின் அலெப்போ, ஹமா மற்றும் லடாக்கியா உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்க இருக்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.