புதுடெல்லி: முதுகலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு வருகிற மார்ச் 5ம் தேதி நடைபெறும் என்று ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி நேரத்தின்போது முதுகலை மருத்துவப்படிப்புக்களுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஒன்றிய சுகாதார துறை அமைசசர் மன்சுக் மாண்டவியா, மார்ச் 5ம் தேதி முதுகலை மருத்துவப்படிப்புக்களுக்கான நீட் தேர்வு நடத்தப்படும். இது 5 மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது. முதுகலை நீட் தேர்வில் பங்கேற்க இருக்கும் மாணவர்கள் ஏற்கனவே தயாராகி வருகின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் தகுதி தேர்வு நடத்தப்படுவது அவசியமாகும். பயிற்சியை நிறைவு செய்யாதவர்களுக்கான கட்ஆப் தேதி சுகாதார துறை அமைச்சகத்தால் ஏற்கனவே நீட்டிக்கப்பட்டுவிட்டது. எனவே அனைத்து மாணவர்களும் நீட் முதுகலை தேர்வில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்” என்றார்.