ஜேர்மனி, உக்ரைனுக்கு தனது Leopard 2 battle tanks என்னும் போர் வாகனங்களை அனுப்புவதை உறுதி செய்துள்ளது.
பெர்லின் அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து, நார்வே, போலந்து முதலான நாடுகளும் கூட, தங்களிடமுள்ள ஜேர்மன் தயாரிப்பான Leopard 2 battle tanks போர் வாகனங்களை உக்ரைனுக்கு வழங்க உள்ளன.
அமெரிக்காவின் முடிவு
ஜேர்மனியைத் தொடர்ந்து, அமெரிக்காவும் Abrams tanks என்னும் தனது போர் வாகனங்களில் 31ஐ உக்ரைனுக்கு வழங்க இருப்பதை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதிசெய்தார்.
நன்றி தெரிவித்துக்கொண்ட உக்ரைன் ஜனாதிபதி
உகரைனுக்கு போர் வாகனங்கள் வழங்குவதாக கூட்டாளி நாடுகள் உறுதியளித்துள்ளதைத் தொடர்ந்து, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டதுடன், இது வெற்றிக்கான பாதையில் ஒரு முக்கிய படியாகும் என்று கூறியுள்ளார்.
ஆனால், வாக்களிக்கப்பட்ட போர் வாகனங்கள் எப்போது உக்ரைனைச் சென்றடையும் என்பது தெரியவில்லை. அமெரிக்க ஜனாதிபதி மாளிகை அலுவலர் ஒருவர், அமெரிக்க போர் வாகனங்கள் உக்ரைனைச் சென்றடைய பல மாதங்கள் ஆகலாம் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், போர் வாகனங்களை உக்ரைனுக்கு அனுப்பும் ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸின் முடிவு மிகவும் அபாயகரமானது என்று கூறி அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது ரஷ்யா.