சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டல அளவிலான சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். களஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று காலை சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழிக முதல்வர், வட்டாச்சியார் அலுவலகம், அரசின் திட்டப்பணிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து மேலும் விவசாய சங்க பிரதிநிதிகள், உற்பத்தியாளர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் நான் முதல்வர் திட்டத்தின் கீழ் பயனடைந்த மாணவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் தலைமையில் மண்டல அளவிலான சட்டம் ஒழுங்கு குறித்து களஆய்வு கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த ஆய்வு கூட்டத்தில், தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள், சேலம் சரக டிஐஜி, சேலம் மாநகர காவல் ஆணையாளர், 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 4 மாவட்டங்களில் நிலவிவரும் சட்டம் ஒழுங்கு நிலவரம் மற்றும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் கொலை, கொள்ளை, இணையவழி மோசடி உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுப்பது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
மேலும் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.