சேலம்: ஒடிசா மற்றும் ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு, கேரளாவிற்கு செல்லும் ரயில்களில் தொடர்ந்து கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க ஆர்பிஎப் மற்றும் தமிழக ரயில்வே போலீசில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ரயில்களில் சோதனை நடத்தப்படுகிறது. இந்த வகையில், சேலம் ரயில்வே போலீசின் தனிப்படையினர் இன்று அதிகாலை, காட்பாடியில் இருந்து சேலம் வரை தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரசில் தீவிர சோதனையை நடத்தினர். இதில், அந்த ரயிலின் பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று ஒரு பேக் கிடந்தது. அதனை எடுத்து பரிசோதித்ததில், 8 கிலோ கஞ்சா இருந்தது.
அதனை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர். கடத்தி வந்த நபர் பற்றி விசாரணை நடத்தியதில், அந்த பெட்டியில் இருந்தவர்கள், பேக் யாருடையது எனத்தெரியவில்லை எனக்கூறிவிட்டனர். கஞ்சாவை கடத்தி வந்த நபர், போலீஸ் சோதனையை பார்த்ததும் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பறிமுதலான 8 கிலோ கஞ்சாவையும் சேலம் ரயில்வே போலீசில் தனிப்படையினர் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து, கடத்தி வந்த நபர் பற்றி விசாரணை நடத்தி வருகிறார். தொடர்ந்து, சேலம் வழியே செல்லும் ரயில்களில் போலீசார், கஞ்சா சோதனையை நடத்தி வருகின்றனர்.