புதுச்சேரி: குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு குடிநீர் தொட்டியில் சமூக விரோதிகள் விட்டிருந்த இரு ஆமைகள் குறித்து தொகுதி எம்எல்ஏ புகாரின் பேரில் ஆமைகளை மீட்ட போலீஸார் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை அந்தோணியார் கோயில் தெரு பகுதியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏழை எளிய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் குடியிருப்பில் உள்ள குடிநீர் தொட்டியில் சில சமூக விரோதிகள் உயிருடன் உள்ள ஆமைகளை இட்டு அப்பகுதி மக்களின் குடிநீரை அசுத்தம் செய்துள்ளதாக அத்தொகுதி எம்எல்ஏ நேருவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு நேரில் சென்று பார்த்த எம்எல்ஏ நேரு, இதுகுறித்து பெரியக்கடை போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து உயிருடன் இருந்த இரு ஆமைகளையும் பத்திரமாக மீட்ட போலீஸார், அவற்றை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக நேரு எம்எல்ஏ கூறுகையில், “சில சமூக விரோதிகள் அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் அமர்ந்து கொண்டு இரவு நேரங்களில் போதைப் பொருட்களை உபயோகிப்பதும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதுமாக உள்ளனர். இதுபற்றி காவல்துறையில் புகார் கொடுத்துள்ளேன். குற்றவாளிகளை கண்டுபிடித்து உடனே கைது செய்வதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இப்பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, “இத்தண்ணீர் தொட்டியில் 3 மாதங்களாக ஆமை போட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.