நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. பஞ்சாப் அணி இந்த வெற்றிக்கு அர்ஷ்தீப் சிங் முக்கிய பங்காற்றியிருந்தார்.
போட்டியின் கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா நேஹல் வதேரா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

போட்டி முடிந்த பிறகு பேசிய அர்ஷ்தீப் சிங், “இன்றைய போட்டியில் நன்றாக பந்து வீசியது மகிழ்ச்சி அளிக்கிறது. அதைவிட அணியின் வெற்றிக்கு உதவியது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. டெத் ஓவர்களில் தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வந்தேன். அதற்காக என்னுடைய பந்துவீசும் கோணத்தையும், ஓடும் அமைப்பையும் மாற்றிக் கொண்டேன்” என்று கூறியிருக்கிறார்.
இதனிடையே மும்பை அணிக்கு எதிரான இந்த போட்டியின் போது அர்ஷ்தீப் சிங் எடுத்த இரண்டு விக்கெட்டுகளுமே போல்ட்தான் ஆகியிருந்தது. இரண்டு முறையுமே மிடில் ஸ்டம்புகள் தெறித்து உடைந்திருந்தன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அர்ஷ்தீப் சிங்கின் பௌலிங்கில் ஸ்டம்புகள் உடைபட்டதை பற்றி ஒரு பக்கம் பேசி வந்தாலும் மற்றொரு பக்கம் உடைக்கப்பட்ட ஸ்டம்பின் விலையை கேட்டு பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

ஒரு ஸ்டெம்ப் செட்டின் விலை 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி 32 லட்சம் ரூபாயாகும். ஒரே போட்டியில் அர்ஷ்தீப் சிங் இரண்டு ஸ்டம்ப்பை உடைத்தால் கிட்டத்தட்ட 64 லட்ச ரூபாய் வரை பிசிசிஐக்கு அர்ஷ்தீப் செலவு வைத்துவிட்டதாக ரசிகர்கள் ஜாலியாக கமென்ட் அடித்து வருகின்றனர்.