சென்னை: Karthi Salary (கார்த்தி சம்பளம்) பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரம் ஏற்றிருந்த கார்த்திக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் இலக்கியத்தில் மணிமகுடமாக கருதப்படுவது பொன்னியின் செல்வன். எழுத்தாளர் அமரர் கல்கி எழுதிய இந்த நாவல் காலங்கடந்து இன்றுவரை பலராலும் கொண்டாடப்படுகிறது. உண்மையையும், புனைவையும் கலந்து எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து பாகங்கள், ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்டதாக இருந்தாலும் தற்போது இருக்கும் இளம் தலைமுறையினரும் ஆர்வமாக படித்துவருகின்றனர்.
பொன்னியின் செல்வன் திரைப்படம்: லைகா நிறுவனம் தயாரிப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாகும் என அறிவிக்கப்பட்டது. ஐந்து பாகங்களாக கொண்ட நாவல் இரண்டு பாகங்களாக திரைப்படமாக உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது.
பொன்னியின் செல்வன் 1: பெரும் எதிர்பார்ப்போடு கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும்பாலான ரசிகர்களை திருப்திப்படுத்தியது. ஆனால் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்தவர்களில் சிலர் தங்களது எதிர்பார்ப்பை பொன்னியின் செல்வன் பூர்த்தி செய்யவில்லை எனவும், இன்னும் கொஞ்சம் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்றும் வருத்தத்தை தெரிவித்தனர். இருப்பினும் படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாயை வசூல் செய்திருந்ததாக தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பொன்னியின் செல்வன் 2: பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றியடைந்த சூழலில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. படத்தின் புரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. இதில் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, சோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டிருக்கின்றனர்.
வந்தியத்தேவன் சம்பளம்: பட அறிவிப்பு வெளியானபோது, நாவலில் முக்கிய கதாபாத்திரமாக விளங்கும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை யார் ஏற்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அந்த கதாபாத்திரத்தை கார்த்தி ஏற்றிருக்கிறார். துறுதுறுவென இருக்கும் வந்தியத்தேவனை கார்த்தி தனது நடிப்பின் மூலம் திரையில் கொண்டு வந்தார். கார்த்தியின் நடிப்பு பலரையும் கவர்ந்தது.

இந்நிலையில் அவர் பொன்னியின் செல்வன் படத்துக்காக வாங்கியிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி கார்த்திக்கு ஐந்து கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது என கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் இந்த சம்பளம் ரொம்பவே கம்மியானது என தெரிவித்துவருகின்றனர்.
மனைவி சொன்னது என்ன?: முன்னதாக கோவையில் நடந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, “ரொமான்ஸ் இல்லாமல் நீங்க கதையே நடிக்க மாட்டீர்களா என எனது மனைவி ரஞ்சனி கேட்டுக்கொண்டே இருப்பார். ஈரோடுக்காரர்கள் இப்படி இருந்தா என்ன பண்றது.
ரொமான்ஸ் இல்லை என்றால் வாழ்க்கை போர் அடிக்காதா என்று சொன்னால்,நிஜத்தில் மட்டும்தான் உங்களுக்கு ரொமான்ஸ் வரவில்லை என கிண்டல் செய்வார்” என ஜாலியாக பேசினார். படத்தின் புரோமோஷனில் கார்த்தியின் பேச்சு பலத்த வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.