சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை இன்று (ஜூன் 21) காலை 5.15 மணிக்கு தொடங்கியது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை ஜூன் 13ஆம் தேதி சோதனை நடத்தியது. 14ஆம் தேதி அதிகாலையில் செந்தில் பாலாஜியை கைது செய்த நிலையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்தில் 3 இடங்களில் அடைப்பு இருப்பதாக கூறினர். அறுவை சிகிச்சை செய்யவும் பரிந்துரைத்தனர்.
அதைத்தொடர்ந்து காவேரி மருத்துவமனைக்கு அவரை மாற்ற வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் சம்மதித்த நிலையில் அவர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு அறுவை சிகிச்சை நடைபெறும் பகுதிக்கு செந்தில் பாலாஜி அழைத்துவரப்பட்டார். அதைத்தொடர்ந்து மயக்கவியல் நிபுணர்களும் வந்தனர்.
காலை 5.15 மணிக்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை தொடங்கியது. மருத்துவர் ரகுராமன் தலைமையிலான மருத்துவக் குழு அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வருகிறது. 4 முதல் 5 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாள்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்படுவார் என்றும் அடுத்து ஏழு நாள்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.