வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று(ஜூன்-24) கென்னடி மையத்தில் அமெரிக்கவாழ் இந்தியர்கள், முன்னணி சி.இ.ஓ.,க்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
வாஷிங்டன் கென்னடி மையத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: உங்களை சந்திக்கும் இந்த தருணத்திற்காக ஆவலுடன் காத்திருந்தேன். இந்தியர்களின் வெற்றிக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இந்தியர்களின் லட்சியம் திகழ்கிறது. அமெரிக்காவின் வளர்ச்சி நோக்கிய கனவும் இந்தியர்களின் கனவும் ஒன்றாக உள்ளது.
அமெரிக்கா மற்றும் இந்தியாவின் உறவு 21 ஆம் நூற்றாண்டின் தலைவிதியை மாற்றும் திறன் கொண்டது. இந்தியாவின் எதிர்காலப் பயணத்தில் சேர உங்களை அழைக்கிறேன். ஒரு சிறந்த உலகத்திற்காக, சிறந்த எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம். இதுவே சரியான நேரம். இந்தியா புதுமை மற்றும் சீர்திருத்தங்களின் சகாப்தமாக இருக்கிறது. அமெரிக்கா மற்றும் இந்தியாவின் கூட்டாண்மை மிகவும் நம்பிக்கை உடையது. கோவிட் தொற்றை ஒழிப்பதற்காக உலகளாவிய முயற்சிகளை இந்தியா எடுத்தது.
இந்தியா இளைஞர்களை கொண்ட இளைய நாடாக உள்ளது. இந்தியாவுடன் தொடர்பு கொள்ளும் எந்த நாடும் பயனடையும். இந்தியா தொழில் துவங்குவதை எளிதாக்கும். இது எனது அரசின் வாக்குறுதியாகும். இந்தியா எப்பொழுதெல்லாம் வலிமையுடையதாக உள்ளதோ அப்பொழுதெல்லாம் உலகம் முழுவதும் அதன் பலனை அடைகிறது.
இன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தொழில்நுட்ப ஒப்பந்தம் நடைபெற்ற இந்த தருணமானது இரு நாடுகளின் நிறுவனங்கள், வணிகர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு நேரடி செய்தியாக உள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் உங்களது வளர்ச்சிக்கான பணிகளை துவங்கியுள்ளோம். ஆனால் இப்போது வளர வேண்டிய கைகளில் உள்ளது.
இந்தியாவில் தீவிர வறுமை ஒழிக்கப்பட்டது. அமெக்க கம்பெனிகள் இந்தியாவில் 16 பில்லியன் டாலர்கள் முதலீடுகள் செய்துள்ளன. இந்தியா உள்கட்டமைப்பில் 125 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளது.
இந்தியா எவ்வளவு வேகமாக முன்னேறி வருகிறது என்பதை அறிந்தால் நீங்கள் மிகவும் மகிழ்வீர்கள். ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய பல்கலைக்கழகம் இந்தியாவில் வருகிறது. புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள், புதிய ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., இந்தியாவில் நிறுவப்படுகிறது, இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் இருந்து வெளிவரும் திறமையானவர்கள் மனித நலனிற்காக சேவை செய்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement