அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துவிட்டது, இந்திய தேர்தல் ஆணையம். இதனால், ‘இரட்டை இலைச் சின்னம், கொடி தோரணங்களை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பயன்படுத்தக் கூடாது’ என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டவட்டமாகத் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஓ.பி.எஸ் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக் கோரியிருக்கிறார்கள். ஆர்ப்பாட்டம் தொடர்பான அவர்களின் விளம்பர பதாகைகளில், அ.தி.மு.க சின்னம், கொடித் தோரணம் இடம் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த, வேலூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, தகவல் தொழில்நுட்பப் பிரிவின் வேலூர் மண்டலச் செயலாளர் ஜனனீ சதீஷ்குமார் ஆகியோர் தலைமையிலான அக்கட்சி நிர்வாகிகள் பலரும் திரண்டுவந்து, எஸ்.பி மணிவண்ணனிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், ‘‘அ.தி.மு.க இயக்கத்துக்கெதிராக செயல்பட்டுவந்த சில தீயசக்தி நபர்களை, எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கிவிட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அந்த நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக் கோரியிருக்கிறார்கள். அவர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது, ‘எங்கள் அ.தி.மு.க-வின் கொடிகளையோ, தோரணங்களையோ, சின்னங்களையோ பயன்படுத்தக்கூடாது’ என ஆட்சியர் அலுவலகம் அமைந்திருக்கும் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகாரளித்துவிட்டோம். மீறி பயன்படுத்தினால், சட்டம்-ஒழுங்குப் பிரச்னை ஏற்படும். எனவே, அவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.