ராஜ்கோட்: குஜராத் மாநிலத்துக்கு பிரதமர் மோடி நேற்று இரண்டு நாள் பயணமாக சென்றார். ராஜ்கோட் நகரிலிருந்து 30 கி.மீ தொலைவில் ஹிராசர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை அவர் நேற்று திறந்து வைத்தார். இது 2,500 ஏக்கர் நிலத்தில் ரூ,1405 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 3.04 கி.மீ நீளத்தில் 45 மீட்டர் அகலத்தில் நவீன ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 14 விமானங்களை நிறுத்தி வைக்க முடியும். இது மாநிலத்தின் முதல் கிரீன்ஃபீல்டு விமான நிலையம் ஆகும்.
அதன்பின் ராஜ்கோட் நகரின் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சவுராஷ்டிரா நர்மதா அவதாரன் நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் மூலம் சவுராஷ்டிரா பகுதியில் 52,398 ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும். 95 கிராமங்களைச் சேர்ந்த 98,000 மக்களுக்கு குடிநீர் வசதி கிடைக்கும். புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் மற்றும் நூலகத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.