சண்டிகர்: ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் நேற்று (ஜூலை 31) நடந்த மத ஊர்வலம் கலவரத்தில் முடிந்த நிலையில், அது தற்போது அருகிலுள்ள குருகிராமின் பாட்ஷாபூருக்கும் பரவியுள்ளது. பாட்ஷாபூரில் பிரதான சந்தையில் 14 கடைகள் சூறையாடப்பட்டன. இன்று பிற்பகலில் திடீரென பாட்ஷாபூருக்குள் பைக்குகள் மற்றும் எஸ்யுவி வாகனங்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் வந்து தாக்குதலில் ஈடுபட்டனர். பிரியாணி கடைகள் மற்றும் பிற உணவகங்களையே அவர்கள் பெரும்பாலும் குறிவைத்து தாக்கினர். செக்டார் 66-ல் 7 கடைகளுக்கு தீ வைத்தனர்.
அந்தக் கும்பல் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரின் கடைகளை மட்டுமே குறிவைத்து சூறையாடி அழித்ததோடு, ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கங்களோடு மசூதியின் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாட்ஷாபூர் சந்தை மூடப்பட்டு அப்பகுதி முழுவதும் போலீஸாரின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.