புதுடில்லி, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான, நீட் நுழைவுத் தேர்வின் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான தகுதி மதிப்பெண் சதவீதத்தை பூஜ்ஜிய மாக குறைத்துள்ளதால், தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமே தவிர, மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை தகுதி முறையை நீர்த்துப்போக செய்யாது’ என, மத்திய அரசு அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாடு முழுதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புக்கு ஆண்டுதோறும், 68,142 இடங்கள் காலியாக உள்ளன. முதுநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில், 50 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறும் டாக்டர்கள், முதுநிலை படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெறுகின்றனர்.
கலந்தாய்வில் பங்கேற்பதற்கான தகுதி மதிப்பெண் சதவீதம் அதிகமாக இருப்பதால், ஆண்டுதோறும் முதுநிலை மருத்துவப்படிப்புக்கான பெரும்பாலான இடங்கள் நிரப்பப்படாமலே வீணாகின்றன.
இந்த ஆண்டு மட்டும், 13,000 சீட்கள் இன்னும் காலியாகவே உள்ளன. இடங்கள் வீணாவதை தவிர்ப்பதற்காக, கலந்தாய்வின் தகுதி மதிப்பெண் சதவீதத்தை பூஜ்ஜியமாக குறைத்து மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால், நுழைவுத் தேர்வு எழுதிய அனைவரும் கலந்தாய்வில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுகின்றனர்.
இது, நீட் தேர்வின் சேர்க்கை தகுதி முறையை நீர்த்துப் போக செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் இது குறித்து நேற்று கூறியதாவது:
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான, நீட் நுழைவுத் தேர்வின் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான தகுதி மதிப்பெண் சதவீதத்தை பூஜ்ஜியமாக குறைத்துள்ளதால், தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமே தவிர மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை தகுதி முறையை நீர்த்துப்போக செய்யாது.
அதிக மதிப்பெண் பெறும் விண்ணப்பதாரர் மட்டுமே முதுநிலை படிப்பில் சேர முடியும். வெளிப்படைத் தன்மையுடன் கலந்தாய்வு நடத்தப்படும். சில தனியார் கல்லுாரிகள் பணம் பெற்றுக் கொண்டு இடம் அளிப்பது முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
பூஜ்ஜியம் சதவீதம் பெற்ற மாணவரும் சிறப்பு மருத்துவராகலாம் என கூறப்படுவது வெறும் கற்பனையே.உண்மை என்னவென்றால், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மட்டுமே அவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்புகள் மற்றும் கல்லுாரிகளில் சேர தகுதி பெறுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்