மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தும் தவறிவிட்ட காங்கிரஸ்” – கேசிஆர் மகள் விமர்சனம்

டெல்லி: மக்களுக்கு சேவை செய்ய காங்கிரஸ் கட்சிக்கு பலமுறை வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவர்கள் அதைச் செய்யத் தவறிவிட்டார்கள் என கேசிஆர்-ன் மகள் கே.கவிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேயான மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறும். இதையொட்டி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் களம் இறங்கியிருக்கின்றனர்.

இந்த நிலையில், தெலங்கானா முதல்வரும், பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் லண்டனுக்கு சென்றிருக்கிறார். அப்போது பேசிய அவர், ” தெலுங்கானா வளர்ச்சி மாதிரி என்பது முக்கியமான தேர்தல் திட்டமாகும். அதில் பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சி, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வரும். காங்கிரஸுக்கு மக்களுக்குச் சேவை செய்வதற்கான வாய்ப்புகள், மீண்டும் மீண்டும் கிடைத்தன.

ஆனால் அவர்கள் அதைச் செய்யத் தவறிவிட்டார்கள். தெலங்கானா மக்களுக்கு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளைக்கூட அவர்கள் செய்து கொடுக்கவில்லை, தெலங்கானா மக்கள் முட்டாள்கள் இல்லை. மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடமாட்டார்கள். 2014-ல் தெலுங்கானா மாநிலம் உருவானபோது, மாநிலம் நெருக்கடியில் இருந்தது. ஆனால், இன்று நிலைமை முழுவதுமாக மாறி, வளர்ச்சி அடைந்துள்ளது” என்றார்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற முந்தைய சட்டமன்றத் தேர்தலில், பிஆர்எஸ் கட்சி 119 இடங்களில் 88 இடங்களை வென்றது. அதாவது மொத்த வாக்குகளில் 47.4 சதவீதத்தைப் பெற்றது. காங்கிரஸ் 19 இடங்கள் அதாவது 28.7 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.