விருதுநகர் சின்னதாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயா. இவர் இனாம் காசியரெட்டியப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 2018-ம் ஆண்டு தனக்கு சொந்தமான 68 கிராம் தங்க நகைகளை அடகு வைத்து விவசாயக்கடன் அடிப்படையில் ரூ.1,26,000 பணம் பெற்றுள்ளார். தொடர்ந்து 2019-ம் ஆண்டில் கடன் தவணைக் காலம் முடிவடைந்ததால் கடனைத்திருப்பிச் செலுத்துவதற்கு விஜயா வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது வங்கி அதிகாரிகள், விஜயா வாங்கிய கடனுக்கு உரிய வட்டியைவிட அதிக வட்டித்தொகை கேட்டதாக கூறப்படுகிறது.

வட்டித்தொகையை செலுத்த தவறினால் நகைகளை ஏலம் விடுவோம் என்று தன்னை மிரட்டியதுடன் மட்டுமல்லாமல், 2021-ம் ஆண்டு விவசாய கடன்களை அரசு தள்ளுபடி செய்தபோதிலும் அதுதொடர்பாக எவ்வித பதிலும் வங்கித்தரப்பில் அவருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் விஜயா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் விஜயா தொடர்ந்த வழக்கில், இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி, “விவசாயக்கடனாக பெற்றத்தொகையை, சாதாரண கடன வகைக்கு மாற்றி அதிக வட்டிக்கேட்டதோடு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அதிகாரிகள் விஜயாவுக்கு மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதனால் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் வழக்கிற்கான செலவுத்தொகையை சேர்த்து ரூபாய் 50,000 மற்றும் அடமான வைத்துள்ள 68 கிராம் நகை உள்ளிட்டவைகளை திருப்பி வழங்க வேண்டும். அபராத தொகையை 6 வார காலத்திற்குள் வழங்காவிட்டால் உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்” என்று நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி சக்கரவர்த்தி தன் தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.