பெலகாவி : கர்நாடக மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான பெலகாவியில், குழந்தை திருமணங்கள் அதிகமாக நடந்துள்ளன. சட்டரீதியில் நடவடிக்கை எடுத்தும், இதை கட்டுப்படுத்த முடியவில்லை.
கர்நாடகாவின், பின் தங்கிய மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் அதிகரிக்கின்றன. கொரோனா தொற்றுக்குப் பின், இத்தகைய திருமணங்கள் மேலும் அதிகரிப்பது, மகளிர், குழந்தைகள் நலத்துறைக்கு தலைவலியாக உள்ளது.
குறிப்பாக மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் சொந்த மாவட்டமான பெலகாவியில், குழந்தை திருமணங்கள் அதிகம் நடந்துள்ளன.
புள்ளி விபரங்களின்படி, 2022ல் பெலகாவியில் 81,817 பெண்கள் கர்ப்பமடைந்தனர். இதில் 208 பேர், 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளாவர். 2023 ஏப்ரல் முதல், அக்டோபர் வரை 51,456 பெண்கள் கர்ப்பிணியராகினர். இவர்களில் 153 பேர் சிறுமியர்.
மஹாராஷ்டிரா – பெலகாவி எல்லை கிராமங்களில், பால்ய திருமணங்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. 19 மாதங்களில் 362 சிறுமியருக்கு திருமணம் நடந்துள்ளது.
மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சிறுமியருக்கு திருமணம் செய்வதால் ஏற்படும் பின் விளைவுகள், கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயனில்லை. கிராமங்களில் குழந்தை திருமணங்கள் நிற்கவில்லை.
அதிகாரிகளும் தகவல் வரும் இடங்களுக்குச் சென்று, குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துகின்றனர். பெற்றோருக்கும் புத்திமதி கூறுகின்றனர். அதிகாரிகளின் நடவடிக்கையால், சில திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே, இதை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement