ஆரோக்கியமும் அறுசுவையும் ஒருங்கே அமைந்த உணவு வகைகளை பிரபலப்படுத்தும் நோக்கில், ‘சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டியை அவள் விகடன் தமிழகத்தில் 11 இடங்களில் நடத்தி வருகிறது. மதுரை, திருச்சி, திருநெல்வேலியை தொடர்ந்து இப்போட்டி கோவையில் நவம்பர் 18-ம் தேதி நடைபெற்றது. இதில் பதின் வயதினரில் தொடங்கி 85 வயது முதியோர் வரை, ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
ஆன்லைன் முன்பதிவிலேயே ஏராள மானோர் பதிவு செய்திருக்க, நிகழ்ச்சி தொடங்கியதுமே அரங்கம் நிரம்பிவிட்டது. கோவை மட்டுமல்லாமல் பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர், திருச்சி, கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்தும் வந்து மக்கள் உற்சாகத் துடன் கலந்து கொண்டனர்.
தொலைக்காட்சி மற்றும் யூடியூப் பிரபலம் செஃப் தீனா நடுவராகப் பங்கேற்ற இப் போட்டி, இரண்டு சுற்றுகளாக நடைபெற்றது. முதல் சுற்றில் போட்டியாளர்கள் வீட்டி லிருந்தே உணவை சமைத்து எடுத்து வந்து, அழகாக அதைக் காட்சிப்படுத்த வேண்டும். உணவு தயாரிக்கப்பட்ட விதம், செய்முறை, காட்சிப்படுத்திய விதம், சுவை மற்றும் பதம் ஆகியவற்றின் அடிப்படையில் 10 பேர் தேர்ந் தெடுக்கப்பட்டு அடுத்த சுற்றுக் குச் சென்றனர். இரண்டாம் சுற்றில் நடுவர் கூறும் விதிமுறை களைப் பின்பற்றி, அங்கேயே நேரடியாகச் சமைக்க வேண்டும் என்பது விதிமுறை.
“தமிழ்நாட்டிலேயே தானிய வகைகளை அதிகம் பயன் படுத்துவது கொங்கு மண்டலத் தில்தான்’’ என்று முதல் சுற்றில் போட்டி யாளர்களை உற்சாகப்படுத்திய செஃப் தீனா, ஆரோக்கிய உணவுகள், வட்டார சிறப்புமிக்க உணவு வகைகள், பாரம்பர்ய முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள், ட்ரெண்டிங் உணவுகள் என வாசகிகள் சமைத்துக் கொண்டுவந்திருந்த உணவு வகைகளை ஆர்வத்துடன் ருசித்து மதிப்பிட்டார். ஒரு மெயின் டிஷ், ஒரு சைடிஷ் கொண்டுவந்தால் போதும் என்று போட்டியாளர்களுக்குச் சொல்லியிருந்தோம். ஆனால் பலரும் பல வகைகள் கொண்டு வந்திருந்தனர்; 36 வகை உணவுகள் வரை இறக்கி தடபுடல் செய்தனர்.
ஸ்டார்ட்டர் வகையில் சில்லி கோபி, பனீர் டிக்கா, டெசர்ட்டுக்கு கம்பு கேக், ரோஸ்மில்க் கேக், கேக் பாப்ஸ், களியில் இத்தனை வகைகளா என்று ஆச்சர்யப் படும் அளவுக்கு கருப்பட்டிக் களி, வெந்தயக்களி, உளுந்தங்களி, திருவாதிரைக் களி எனக் கொண்டு வந்திருந்தனர். முக்கியமாக, கொங்குநாட்டின் டிரேட் மார்க் உணவான கும்மாயம், பள்ளிப்பாளையம் சிக்கனில் தொடங்கி ஜப்பான் சிக்கன், ஃப்யூஷன் நாட்டுக்கோழி, லங்கன் டெவில் சிக்கன், என்கிலாடஸ் வரை தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பலாக்காய் சொதி, கொங்கு கோழி வெள்ளை பிரியாணி, திரு நீற்றுப் பச்சிலை பிரியாணி, வெற்றிலை பூண்டு சாப்பாடு, கேரமல் புடிங், மூங்கில் அல்வா, முருங்கை இலை அடை, சிறுதானிய நெத்திலி அவியல், மஷ்ரூம் குனாபா, ஆரஞ்சு தோல் தொக்கு, கினோவா ரப்டி உட்பட பல வித்தியாசமான உணவு வகைகளைக் காட்சிப் படுத்தி அசத்தினர்.
சங்க இலக்கியமான `பொருநராற்றுப் படை’யில் குறிப்பிடப்படும் தகைமான்காடி எனும் ஒருவகை ஊறுகாய், கருடன் சம்பா அரிசியில் செய்த மாதுளம் பிஞ்சு சாதம் போன்ற உணவு வகைகளையும் களத்தில் இறக்கியிருந்தனர் போட்டியாளர்கள். ஒரு பக்கம் பாரம்பர்ய உணவு, மற்றொரு பக்கம் தடபுடல் அசைவ வகை உணவுகளால் கடுமையான போட்டி நிலவியது. பலருக்கும் அதிகம் தெரிந்திராத மருத்துவ குணங்கள் நிறைந்த உணவுகளும் காட்சிப்படுத்தப்பட்டன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருத்துவ ரொட்டி, உடல் சூட்டைத் தணிக்கும் கற்றாழைப்பூ துவையல், எள்ளு சட்னி போன்ற உணவுகளும் தனி கவனம் ஈர்த்தன.
கடுமையான போட்டி நிலவிய முதல் சுற்றில் இருந்து சென்னையில் நடக்கவுள்ள இறுதிப்போட்டிக்கு வனஜா மற்றும் சாந்தி நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 10 போட்டியாளர்கள் அன்று மதியம் நடந்த இரண்டாவது சுற்று `லைவ் குக்கிங்’ போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அதிலிருந்து இளங்கோவன், சௌஃபி, ஜெபா எஸ்தர் மற்றும் காவியா ஜெயக்குமார் ஆகியோர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப் பட்டனர்.
இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப் பட்டவர்கள் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப் பட்டன.
கண்கள், நாவு, நாசி, வயிற்றுக்கு விருந்தென முடிந்தது போட்டி தினம்!
சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் அனைத்துப் பாலினத்தவரும் பங்கேற்கலாம். கலந்துகொள்ள விரும்புபவர்கள் vikatan.com/sss என்ற லிங்கில் பதிவு செய்யலாம் அல்லது 97909 90404 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு ‘SSS’ என்று மெசேஜ் அனுப்பியும் பெயரைப் பதிவு செய்யலாம்.


