புதுடில்லி தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள, 125 ஆண்டு பழமையான இந்திய தபால் அலுவலக சட்டத்துக்கு மாற்றான, தபால் அலுவலக மசோதா, ராஜ்யசபாவில் நேற்று நிறைவேறியது.
தபால் அலுவலகங்கள் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும், இந்திய தபால் அலுவலக சட்டம், 1898ல் நடைமுறைக்கு வந்தது.
இதை தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப திருத்தியமைக்கும் வகையில், தபால் அலுவலக மசோதா, கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா நேற்று ராஜ்யசபாவில் நிறைவேறியது.
இந்த சட்டத்தின்படி, நாட்டின் பாதுகாப்பு மற்றும் நட்பு நாடுகளின் நலன், மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக, தபால் வாயிலாக அனுப்பப்படும் பொருட்களை ஆய்வு செய்ய, அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
இது குறித்து மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
தற்போதைய சமூகம் மிகவும் சிக்கலானதாகவும், பன்முகத்தன்மை உள்ளதாகவும் உள்ளது.
இந்த நேரத்தில், நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசின் தலையீடுகள் தேவை. அந்த வகையில் இந்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நீதித்துறை மசோதா
நீதித்துறை தொடர்பான, வழக்கறிஞர்கள் மசோதா, ராஜ்யசபாவில், மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேறியது. இந்த மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.”நீதித்துறை மிகவும் கண்ணியமான தொழிலாகும். தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப, நீதித்துறையை ஒழுங்குபடுத்தும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக நீதிமன்றங்களில் இடைத்தரகர்கள் தடுக்கப்படுவர்,” என, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் குறிப்பிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்