மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த அதீத மழையினால் சென்னையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக வேளச்சேரி, துரைப்பாக்கம், தாம்பரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியிருப்பதால், பொதுமக்கள் வெளியில் வரமுடியாமல் தவித்து வருகிறார்கள். பல இடங்களில் மின்சாரம், உணவு இல்லாத நிலையே இருக்கிறது. இதனால் தி.மு.க அரசு செயல்படுத்திய ரூ.4000 கோடி மதிப்பிலான வடிகால் பணிகள் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சுமார் ரூ.4000 கோடி மதிப்பில் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டதாக மார்தட்டும் விடியா தி.மு.க அரசின் இரண்டரை ஆண்டு கால ஆட்சி இதுவரை ஒரு புயலை கூட சந்திக்கவில்லை. ஆனால் இந்த சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது. நிர்வாகத் திறனற்ற ‘தி.மு.க மாடல் ரோடு’, ‘இரண்டரை ஆண்டு கால விடியா தி.மு.க ஆட்சிக்கு இதுவே சாட்சி’ என்பது போல் இன்று சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி தவிக்கிறது. மழை அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்த போதும் தி.மு.க அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மக்கள் இன்னல்களை சந்திக்கின்றனர்” என கொதித்திருந்தார்.
இதுகுறித்து விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின், “ரூ.4000 கோடிக்கு மழைநீர் வடிகால் பணிகள் செய்தும் சென்னை மிதக்கிறது என எதிர்கட்சி தலைவர் பேசியிருக்கிறார். இதைநான் அரசியாலாக்க விரும்பவில்லை. ரூ.4000 கோடிக்கு பணிகள் நடந்ததால்தான் 47 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மழை பெய்தும் சென்னை இப்பொழுது தப்பித்திருக்கிறது. அ.தி.மு.க ஆட்சி காலத்தில் எதுவும் செய்யவில்லை. ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் இந்த பணிகளை செய்திருக்கிறோம். மேலும் மத்திய அரசிடம் ரூ.5000 கோடி நிவாரண நிதி கேட்டிருக்கிறோம். அதைப்பொறுத்தும் மாநில அரசின் நிதிநிலைமையை பொறுத்தும் நிவாரணம் குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.

சர்ச்சையை கிளம்பியிருக்கும் இந்த விவகாரம் குறித்து தி.மு.க செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம், “சென்னையில் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி காலத்தில் ரூ.8031 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த தொகையை கொண்டு மூன்று சுடுகாட்டில் மட்டுமே வேலை செய்திருக்கிறார்கள். வேறு எங்கும் வடிகால் பணிகள் நடக்கவில்லை. எனவே அதுகுறித்து முதலில் அறிக்கை வெளியிட்டுவிட்டு மானத்துடன் எடப்பாடி கேள்வி கேட்க வேண்டும். அவர்கள் அந்த தொகையை சரியாக பயன்படுத்தி இருந்திருந்தால், நாம் ரூ.4,000 கோடி செலவிட வேண்டிய தேவை இருந்திருக்காது.
நாங்கள் புதிதாக 3,341 கி.மீட்டருக்கு பணிகளை மேற்கொண்டிருக்கிறோம். அதிமுக ஆட்சி காலத்தில் 2015-ல் 7 நாட்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நாங்கள் இரண்டு நாட்களில் நிலைமையை சரிசெய்திருக்கிறோம். அனைத்து இடங்களிலும் கால்வாய் ஆழமாக அமைக்கப்பட்டதால் விரைந்து தண்ணீர் வெளியேறி இருக்கிறது. சில இடங்களில் அதிக பாதிப்பு ஏற்பட காரணம் 17 மணி நேரம் புயல் கரையை கடக்காமல் சென்னைக்கு அருகில் இருந்ததே காரணம். புறநகர் பகுதிகளில் அருகில் ஏரி இருப்பதால் தண்ணீர் வெளியேற காலதாமதம் ஆகும். அதை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.