“ராமஞ்சேரி – திருத்தண்டலம் பகுதியில் புதிதாக பெரிய ஏரி” – அமைச்சர் துரைமுருகன் கூறியது என்ன?

சென்னை: “ராமஞ்சேரி – திருத்தண்டலம் பகுதி மக்கள் ஒப்புக்கொண்டால்தான், மிகப் பெரிய – பிரமாண்டமான ஓர் ஏரியை, தமிழகத்தில் உள்ள ஏரிகளிலேயே பெரிய ஏரி ஒன்றை உருவாக்க முடியும்” என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

புழல் ஏரியின் ஒரு பகுதியில் பக்கவாட்டு தாங்கு சுவர் உடைந்திருந்த நிலையில், அந்தப் பகுதியில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் மூர்த்தி ஆகியோர் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அமைச்சர் துரைமுருகன் கூறியது: “புழல் ஏரியில், ஏதோ ஒரு பெரிய விரிசல் ஏற்பட்டதைப் போல ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்கள். அந்தச் செய்தியைப் படித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், என்னை அழைத்து நேரடியாக அங்கு சென்று, உண்மை நிலையை அறிந்து வருமாறு கூறினார்.

நான் இங்கு வருவதற்கு முன்பாகவே, நீர்வளத் துறை செயலாளரும், பொறியாளர்களும் இங்கு வந்திருந்தனர். நிலை குறித்து அவர்களிடம் கேட்டறிந்தேன். சாதாரணமாக 7 அடிக்கு மேல் உள்ள பக்கவாட்டு தாங்குச் சுவரில் ஏற்பட்டுள்ள உடைப்புக்கும், தண்ணீர் வெளியேறியதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எந்த விதத்திலும், புழல் ஏரியால் மக்களு்ககு ஆபத்து இருக்காது. ஏரியின் நீர்மட்டத்தை அரசு சரியான முறையில் கையாள்கிறது. புழல் ஏரி மட்டுமல்ல, மற்ற அனைத்து ஏரிப் பகுதிகளிலும் ஆபத்து இல்லாமல் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எனவே, மக்கள் அச்சமடையத் தேவை இல்லை. பத்திரிகை மற்றும் ஊடகங்களும் சின்னதை பெரிதாக்க வேண்டாம் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் புதன்கிழமை செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்தார். அப்போது அவரிடம், சென்னையில் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட பழைய நீர்தேக்கங்கள்தான் உள்ளன. சென்னை புறநகர் பகுதிகளில் புதிய தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக ஏதாவது திட்டம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “புதிய தடுப்பணைகள் கட்டுவதற்கு முதலில் புவியியல் ரீதியாக நில அமைப்பு வேண்டும். இந்த நில அமைப்பு எங்கு வரும் என்று கேட்டால், நமக்கு கொசஸ்தலை ஆறு, ஆரணி ஆறு இவையெல்லாம் வரும் இடத்தில் இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. ஒன்று கண்டிகை, மற்றொன்று ராமஞ்சேரி -திருத்தண்டலம். இந்த இரு இடங்களும் தேர்வு செய்யப்பட்டன.

ஆனால், தடுப்பணை அங்கு கட்டக்கூடாது என்று மக்கள் புரட்சி செய்தனர். அதேநேரத்தில், அதிமுக ஆட்சியில், ஆற்றுக்கு நடுவில் கட்டி ஒரு குட்டை போல தேக்கி வைத்துவிட்டனர். அதனால், எந்த பிரயோஜனமும் கிடையாது. எனவே, ராமஞ்சேரி என்ற ஓர் இடம் உள்ளது. மறுபடியும் மக்கள் புரட்சி செய்து கொண்டுள்ளனர். எனவே, ராமஞ்சேரி – திருத்தண்டலம் பகுதி மக்கள் ஒப்புக்கொண்டால்தான், மிகப் பெரிய ஒரு ஏரியை, பிரமாண்டமான ஏரியை, தமிழகத்தில் உள்ள ஏரிகளிலேயே பெரிய ஏரி ஒன்றை கட்ட முடியும். இதுதொடர்பாக முதல்வரிடம் நான் கூறியிருக்கிறேன். ஒவ்வொரு முறை வெள்ளம் வரும்போதெல்லாம் பேசிவிட்டு நாம் சென்றுவிடுகிறோம். எனவே, வரும்முன் காக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.