பெங்களூரு,: பெங்களூரில் ஓராண்டுக்கு முன்பு, புதிதாக போடப்பட்ட சிமென்ட் சாலையில் 4 அடிக்கு ஆழத்திற்கு பள்ளம் விழுந்து உள்ளது. பள்ளத்தை சுற்றி இரும்பு தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டு இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.
பெங்களூரில் தினமும் 1 கோடி வாகனங்கள், சாலையில் ஓடுகின்றன. தார் சாலைகளை அரசு சரியாக பராமரிக்காததால், அடிக்கடி பள்ளம் விழுகிறது. குண்டும், குழியுமான சாலைகளில் செல்லும் போது, விபத்தில் சிக்கி, வாகன ஓட்டிகள், உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து உள்ளன.
சில இடங்களில் தார் சாலைகள் பெயர்ந்து காணப்படுகின்றன. தார் சாலைகளை சரியாக பராமரிக்க முடியாததால், ‘ஒயிட் டாப்பிங்’ எனும் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள், பெங்களூரில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், நகரின் முக்கிய பகுதியான, ஹலசூரு ஏரிக்கரையை ஒட்டி செல்லும் பாஸ்கரன் சாலையில், கடந்த ஆண்டு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலையில் பள்ளம் காணப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு அந்த சாலையில் உள்ள பள்ளம் பெரிதானது. 4 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த ஹலசூரு போலீசார் அங்கு சென்று, பள்ளத்தை சுற்றி, இரும்பு தடுப்பு கம்பி வைத்தனர்.
நேற்று காலை அந்த இடத்தில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
அந்த சாலை தமிழகத்தின் சென்னை, ஆந்திராவின் சித்துாரை இணைக்கும், முக்கியமான சாலை என்பதால், எந்நேரமும் வாகனங்கள் இயங்கி கொண்டே இருக்கும்.
இதனால் பள்ளத்தை விரைவில் மூட வேண்டும் என்று, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். சாலையை கூட சரியாக பராமரிக்காத, அதிகாரிகள் மீது கோபத்தை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘சிமென்ட் சாலையில் பள்ளம் விழுந்தது ஆச்சரியமாக உள்ளது. இது அரிதாக நடக்க கூடியது. பள்ளம் விழுந்ததற்கு என்ன காரணம் என்று, விசாரணை நடத்துவோம்’ என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்