தூத்துக்குடி: பல இடங்களில் வடியாத வெள்ளம்; பள்ளிக் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!
அண்மையில் கொட்டித் தீர்த்த அதி கனமழையினால், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகின. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதி கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தூத்துக்குடி நகர் மற்றும் கிராமப் பகுதிகள் வெள்ளக்காடாகின. சாலைகள் துண்டிப்பு, வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து உடமைகள் சேதம், உணவுக்குக்கூட வழி இல்லாத நிலை என தூத்துக்குடி மக்கள், பெரும் பரிதவிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர்.

அரசு இயந்திரம் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளைத் துரிதகதியில் மேற்கொண்டு வருகிறது. மழை ஓய்ந்து பல நாள்களாகியும், தூத்துக்குடியில் பல பகுதிகளில் வெள்ளநீர் வடியாமல் இருக்கிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.