ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட வேண்டும் என காங்கிரசில் சில தலைவர்களும், வெளியிடக்கூடாது என சில தலைவர்களும் கூறி வருவதால், லோக்சபா தேர்தல் முடியும் வரை அறிக்கை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முதல்வர் சித்தராமையா முடிவு செய்துள்ளார்.
கர்நாடகாவில், 2013 – 18ல் சித்தராமையா முதல்வராக இருந்தபோது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இதற்கு, லிங்காயத், ஒக்கலிகா சமூகத்தினர், 2016 முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மீண்டும் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. கடந்த முறை எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட முயற்சித்து வருகிறது.
இதன் தலைவராக இருந்த ஜெயபிரகாஷ் ஹெக்டேவின் பதவி காலம், நடப்பாண்டு நவ., 26ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனாலும் அவரது பதவி காலத்தை, 2024 ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டது.
ஜெய்பிரகாஷ் ஹெக்டேயின் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தால், அதை பகிரங்கப்படுத்துவதற்கு முன், அமைச்சரவை துணை குழுவிற்கு பரிந்துரைக்க வேண்டும்; லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், ஜாதிவாரி மக்கள் தொகை அறிக்கை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அதை தவிர்க்க வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டு, விரைவில் பகிரங்கப்படுத்த வேண்டும். இதன் மூலம் லோக்சபா தேர்தலில் அதிக இடங்களை பெற வாய்ப்பு இருக்கும் என்று காங்கிரஸ் மேலிட தலைவர்கள் நம்புகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, வீரசைவ லிங்காயத்து தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான சிவசங்கரப்பா, அறிவியல் பூர்வமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.
கட்சிக்குள்ளும், வெளியேயும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ளதால், லோக்சபா தேர்தல் முடியும் வரை இந்த அறிக்கையை வெளியிட வேண்டாம் என, சித்தராமையா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்