இந்திய அணி படுதோல்வி… தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் செஞ்சூரியனில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி, 408 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அபாரமான பேட்டிங் வெளிப்படுத்திய டீன் எல்கர் 185 ரன்கள் குவித்து ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவருக்கு பக்கபலமாக ஆடிய மார்கோ ஜான்சன் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இவர்கள் இருவரின் ஆட்டம் தென்னாப்பிரிக்கா அணி வலுவான ரன்களை குவிக்க அடித்தளமிட்டது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும், தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 245 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால் 163 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது போலவே ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஷ்வால் ஆகியோர் ஓப்பனிங் இறங்கி ஆட்டமிழந்தனர். 

அவர்கள் பின்வந்த சுப்மன் கில், விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து நிலைத்து நிற்பார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 26 ரன்களுக்கு மார்கோ ஜான்சன் பந்துவீச்சில்  ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகும் இந்திய அணியின் விக்கெட் சரிவுகள் நிற்கவில்லை. விராட் கோலி மட்டும் சிறப்பாக ஆடி அரைசதம் அடிக்க, 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவருக்கு பக்கபலமாக ஒருவர் கூட பார்ட்னர்ஷிப் அமைக்க மறுமுனையில் நிற்கவில்லை.

தென்னாப்பிரிக்காவின் டாப் கிளாஸ் பவுலிங்கில் இந்திய அணி திக்குமுக்காடியது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டுகளும், நந்த்ரே பர்கர் 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்குகிறது. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.