கலையுலகை காத்து நின்ற “பூந்தோட்டக் காவல்காரன்” விஜயகாந்த்

நடிகர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவால் ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் தேமுதிக., தொண்டர்கள் கண்ணீரில் மிதக்கின்றனர். அந்தளவுக்கு மக்கள் மத்தியில் ஒருவனாய் திகழ்ந்தார். சினிமாவிலும் சரி… அரசியலிலும் சரி… தனக்கு மனதில் பட்டதை நேர்மையாக, தைரியமாக பேசியவர் விஜயகாந்த். சினிமா, அரசியலில் அவர் செய்த சில முக்கிய நிகழ்வுகள், சாதனைகளை இங்கு நினைவு கூறுகிறோம்.

வளரும் கலைஞர்களுக்கு உதவி
ஆரம்பத்தில் இவரது கருப்பு நிறம் கலையுலகில் சிலரால் விமர்சிக்கப்பட்டு பின் கரடு முரடான பாதைகள் பல கடந்து, கடின உழைப்பிற்குப் பின் கலையுலகில் நிலையான இடம்பிடித்து, மலையளவு உச்சம் தொட்ட மதுரை மண்ணின் பெருமை மிகு அடையாளமாக பார்க்கப்படும் விஜயகாந்த், தான் அனுபவித்த வலியும், சிரமங்களும் வேறு எந்த ஒரு வளரும் திரைக்கலைஞருக்கும் நேராத வண்ணம் உதவிக்கரம் நீட்டி, பல திரைப்படக் கல்லூரி மாணவர்களை இயக்குநராக்கி அழகு பார்த்தார்.

கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு
“ஊமை விழிகள்”, “உழவன் மகன்”, “பூந்தோட்டக் காவல்காரன்”, “செந்தூரப்பூவே”, “புலண்விசாரணை”, “கேப்டன் பிரபாகரன்”, “பரதன்” என ஏராளமான திரைப்படங்களின் மூலம், ஆபாவாணன், ஆர்.அரவிந்த்ராஜ், செந்தில்நாதன், பி ஆர் தேவராஜ், ஆர்கே செல்வமணி, எஸ்டி சபா போன்ற பல திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு தந்து, அவர்கள் பின்னாளில் பிரபல இயக்குநராக வர பேருதவி புரிந்தவர் “கேப்டன்” விஜயகாந்த்.

கலையுலகை காத்து நின்ற “பூந்தோட்டக் காவல்காரன்”
4.5 கோடி ரூபாய் கடனில் இருந்த நடிகர் சங்கத்தை, இவர் தலைமையேற்ற பின் தனது திறமையான மற்றும் சாதுர்யமான அணுகுமுறைகளால், 2002ம் ஆண்டு சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் 'நட்சத்திர இரவு' என்ற நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து, அதை வெற்றிகரமாக நடத்தி முடித்து, அதிலிருந்து பெறப்பட்ட தொகையைக் கொண்டு கடனை அடைத்து நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தார்.

விஜய்யை ஏற்றிவிட்ட ஏணிப்படி
நடிகர் விஜய்யின் முதல் படமான “நாளைய தீர்ப்பு” தோல்வியடைய, விஜயகாந்தோடு விஜய் இணைந்து ஒரு படத்தில் நடித்தால் அது அவரது திரை வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்கும் என்று எண்ணிய இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகருக்காக, தானே மனமுவந்து நடித்துக் கொடுத்த திரைப்படம்தான் “செந்தூரப்பாண்டி”. மிகப் பெரிய வெற்றி பெற்ற இத்திரைப்படத்திற்குப் பின் நடிகர் விஜய்யின் திரைப்பயணமும் பிரகாசமானது.

ஒரே ஆண்டில் 18 படங்கள்
1979ஆம் ஆண்டு தனது கலையுலகப் பயணத்தை ஆரம்பித்த நடிகர் விஜயகாந்த், 1984ஆம் ஆண்டில் மட்டும் 18 படங்களில் நடித்து சாதனை படைத்தார். மேலும் தமிழில் வெளியான முதல் 3டி திரைப்படமான “அன்னை பூமி” திரைப்படத்தின் நாயகனாகவும் நடித்து பிரமிப்பூட்டினார்.

பிறமொழியில் நடிக்காத கேப்டன்
தனது நீண்ட நெடிய இந்த கலைப்பயணத்தில் வேறு எந்த மொழி திரைப்படங்களிலும் நடிக்காமல், தமிழில் மட்டுமே 150க்கும் அதிகமான படங்களில் நடித்து, தமிழ் நடிகராக மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் “கேப்டன்” விஜயகாந்த்.

அரசியலிலும் சாதனை
சினிமா உலகிலிருந்து அரசியல் உலகிற்கு வந்து சாதித்து விடலாம் என எண்ணி எத்தனையோ நடிகர்கள் முயற்சித்து முடியாமல் முடங்கிப்போன வேளையில், முடியும் என முயற்சித்து, முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்குப் பின் ஒரு கட்சியின் தலைவராக, சட்டசபை எதிர்கட்சித் தலைவராக அரசியல் களம் கண்ட ஆச்சர்ய திரைக்கலைஞர்தான் “கேப்டன்” விஜயகாந்த். கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரும் தலைவர்கள் இருந்தபோது தைரியமாக அரசியல் கட்சி தொடங்கி அதில் தன்னால் நிலைக்க முடியும் என நிரூபித்தவர் விஜயகாந்த்.

ரசிகர் மன்றத்தில் தமிழ்நாடு
தென்னிந்திய, அகில இந்திய என இயங்கி வந்த தனது ரசிகர் மன்றங்களின் பெயர்களை, 1982ஆம் ஆண்டு “தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர் மன்றம்” என பெயர் மாற்றம் செய்து, தமிழ்நாட்டிற்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்த்தார்.

நலிந்த கலைஞர்களுக்கு உதவி
நடிகர் சங்கத் தலைவராக இவர் இருந்தபோதுதான், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவும் பொருட்டு, ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்து வைத்து, அதற்காக ஒரு பெரிய தொகையையும் டெபாஸிட் செய்து வைத்தார்.

வறுமை ஒழிப்பு தினம்
ஈழத் தமிழர்களின் அல்லல்களை அறிந்தவரும், அவர்களின் உணர்வுகளை உணர்ந்தவருமான விஜயகாந்த், தனது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களை தவிர்த்து வந்ததோடு, அந்த நாளை “வறுமை ஒழிப்பு தினம்” என அறிவித்து, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வழிவகையும் செய்து வறியோரின் மனங்களிலும், எளியோரின் மனங்களிலும் ஏழைப் பங்காளனாய் இடம் பிடித்தார்.

விஜயகாந்த் போட்டோ ஆல்பம் காண : https://www.dinamalar.com/news_detail.asp?id=3514530

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.