டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 50 வருடங்களில் நான் பார்த்த டாப் 10 சிறந்த சதங்களில் இதுவும் ஒன்று- ராகுலை பாராட்டிய கவாஸ்கர்

செஞ்சூரியன்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பமானது.

அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்திய அணி 59 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. இந்தியா தரப்பில் ராகுல் 70 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது.

தொடர்ந்து பேட்டிங் செய்த ராகுல் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி 67.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ராகுல் 101 ரன்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 2வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில் ராகுல் அடித்த இந்த சதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 50 வருடங்களில் தாம் பார்த்த டாப் 10 சிறந்த சதங்களில் ஒன்று என்று சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,”கடந்த 50 வருடங்களில் நான் பார்த்த டாப் 10 சிறந்த சதங்களில் இதுவும் ஒன்று. நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய இன்னிங்ஸ். ஒரு நாட்டின் மைல்கல் அளவிற்கு இது அவருடைய சிறந்த சதம். குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் இது இந்தியர்கள் அடித்த சிறந்த சதங்களில் ஒன்றாகும். சவாலான சூழ்நிலையில் அவர் அபாரமாக செயல்பட்டார். இந்த செயல்பாடுகளால் அவர் கண்டிப்பாக மிடில் ஆர்டரில் தமக்கான இடத்தை உறுதி செய்துள்ளார். வருங்காலங்களில் விக்கெட் கீப்பராக இல்லாவிட்டாலும் இந்தியாவுக்கு 5 அல்லது 6வது இடத்தில் விளையாட அவர் வேண்டும்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.