விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்திய விஜய் மீது செருப்பு வீச்சு

தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சி தலைவரும், திரையுலக ஆளுமையுமான விஜயகாந்த் மரணம் அடைந்ததை தொடர்ந்து. நேற்று முன்தினம் இரவு அவரது உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தி, மனைவி பிரேமலதா மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு சிலர் “விஜய்யே வெளியே போ…” என்று கூச்சலிட்டார்கள்.

அஞ்சலிக்கு பின் தனது காரில் ஏற முற்பட்டார் விஜய். அப்போது பின்னால் இருந்து யாரோ ஒருவர் செருப்பை கழற்றி வீசினார். நல்லவேளையாக அது விஜய் மீது விழவில்லை. அந்த செருப்பை லாவகமாக பிடித்த ஒருவர் திருப்பி அதனை வீசியவர் பக்கமே திருப்பி வீசினார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

விஜய் திரையில் முதன் முதலாக தோன்றியதே விஜயகாந்த் படங்களில்தான். சிறு வயது விஜயகாந்தாக, குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்தார். அப்படி இருக்கும்போது கடந்த 2 வருடமாக உடல்நலமில்லாமல் இருக்கும் விஜயகாந்தை பார்க்க ஒரு முறைகூட வரவில்லை என்ற கோபம்தான் அவர் மீது செருப்பு வீச்சு நடத்த காரணம் என்கிறார்கள்.

என்றாலும் இறுதி அஞ்சலி செய்ய வந்தபோது நடந்த இந்த சம்பவம் பிரேமலதாவையும், விஜய் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இன்று அல்லது நாளை இந்த சம்பவம் குறித்து பிரேமலதா அறிக்கை வெளியிடுவார் என்று தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.