சபரிமலை:மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் நேற்று நடந்தது. இதில் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இன்று திருவாபரணம் பந்தளத்தில் இருந்து புறப்படுகிறது.
சபரிமலையில் ஜன. 15-ல் மகரஜோதி பெருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அனைத்துத்துறை அதிகாரிகளும் சபரிமலை, பம்பை மற்றும் ஜோதி தெரியும் இடங்களில் முகாமிட்டுள்ளனர். சபரிமலை மற்றும் பம்பையில் இரண்டாயிரத்து 500 போலீசாரும், கோட்டயம், பத்தணந்திட்டை, இடுக்கி மாவட்டங்களில் தேவைக்கேற்ப போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேட்டைதுள்ளல் நிறைவு
கார்த்திகை 1 முதல் எருமேலியில் பேட்டைத்துள்ளல் நடைபெற்றாலும் மகர ஜோதிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக நடைபெறும் அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டைத்துள்ளல் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நேற்று மதியம் 12:00 மணிக்கு ஆகாயத்தில் வட்டமிட்டு பறந்த கருடனை கண்டதும் பேட்டை தர்ம சாஸ்தா கோயிலில் இருந்து அம்பலப்புழா பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட யானைகளுடன் பேட்டைத்துள்ளி வந்தனர். நெற்றிப் பட்டம் கட்டிய யானையுடன் பேட்டை துள்ளிய இவர்கள் வாவர் பள்ளி வாசலை வலம் வந்து பெரிய சாஸ்தா கோயிலில் நிறைவு செய்த பின்னர் பெருவழிப்பாதை வழியாக சபரிமலை புறப்பட்டனர்.
இதுபோல ஆலங்காடு பக்தர்கள் மாலை மூன்று மணிக்கு வானில் பிரகாசித்த நட்சத்திரத்தை கண்டதும் பேட்டை துள்ளினர். இதில் ஏராளமான பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இந்த இரண்டு குழுவினரின் பேட்டைத்துள்ளலுடன் பேட்டைதுள்ளல் நிறைவு பெற்றது.
திருவாபரணம் இன்று புறப்பாடு
மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் இன்று பந்தளத்தில் இருந்து புறப்படுகின்றன. மன்னர் குடும்பத்தில் ஏற்பட்ட மரணம் காரணமாக பந்தளம் சாஸ்தா கோயில் அடைக்கப்பட்டுள்ளதால் இங்கு திருவாபரணப் பெட்டிகள் திறக்கப்பட மாட்டாது.
தேவசம்போர்டு அதிகாரிகள் திருவாபரணங்களை பெற்ற பின், நித்தி கலசம் செய்யப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டு திறக்கப்படாமல்அதிகாலை பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்படும். இந்த திருவாபரணங்கள் மதியம் 12: 30 மணிக்கு பவனி புறப்படுகிறது.
இந்த பவனி ஜன. 15 மாலையில் சன்னிதானம் வந்தடையும். மகரஜோதிக்கு முன்னோடியான பிராசாத சுத்தி பூஜைகள் , இன்று தீபாராதனைக்கு பின்னர் நடைபெறுகிறது. நாளை அதிகாலை கணபதிேஹாமத்துக்கு பின்னர் கோவிலுக்கு வெளியேயும், 7:30 மணிக்கு உஷபூஜைக்கு பின்னர் கோவிலுக்கு உள்ளேயும் பிம்பசுத்தி பூஜைகள் நடைபெறும்.
மகரசங்கரபூஜை
மகரஜோதி நாளில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று மகர சங்கரமபூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் முகூர்த்தமான அதிகாலை 2:46 மணிக்கு இது நடைபெறுகிறது. இந்த நேரத்தில் திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து கொடுத்து விடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு நேரடியாக அய்யப்பனின் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து வழக்கமான நெய்யபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். மாலை 5:00 மணிக்கு நடை திறந்து 6:30 மணிக்கு திருவாபரணம் அணிவித்து தீபாராதனையும், தொடர்ந்து மகரஜோதி தரிசனமும் நடைபெறும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement