காதல், எதிர்பாலினம் மீது வருவதுபோலவே தன்பாலினம் மீதும் வரும் என்பதை சமூகம் சமீபத்தில்தான் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், குடும்ப அமைப்புக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதா என்றால், அது கேள்விக்குறிதான்… இதுதொடர்பான கேஸ் ஹிஸ்டரி ஒன்றைதான் இந்தக் கட்டுரையில் பகிரவிருக்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.
”அந்த இளைஞர் இருபதுகளின் இறுதியில் இருந்தார். பார்ப்பதற்கு எந்தக் குறையும் சொல்ல முடியாத அளவுக்கு அழகான தோற்றத்துடன் இருந்தார். வசதி படைத்தவர் என்பதும் சொல்லாமலே தெரிந்தது. தனக்கு திருமணம் செய்து வைப்பதற்கு, தன்னுடைய பெற்றோர் பெண் தேடிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். ‘அது இயல்பான விஷயம்தானே’ என்றேன். சற்று நேரம் அமைதியாக இருந்தவரிடம், ‘நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா’ என்றேன். ‘ஆமாம் டாக்டர்’ என்றார். ‘உங்கள் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா… இந்தக் காலத்தில், அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களில் காதல் திருமணம் சாதாரண விஷயம்தானே…’ என்றேன். என் கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் தலைகுனிந்தபடியே அமர்ந்திருந்தார். நானும் பொறுமை காத்தேன். சில விநாடிகள் கழித்து நிமிர்ந்தவரின் கண்கள் லேசாக கலங்கியிருந்தன.

‘எங்க வீட்ல லவ் மேரேஜுக்கெல்லாம் எதிர்ப்பு கிடையாது டாக்டர். என் அக்காவோடதுகூட லவ் மேரேஜ்தான். ஆனா, என் காதலுக்குத்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க’ என்றார் வருத்தமுடன். ‘எதனால்’ என்றேன். ‘ஆக்சுவலி நான் என் ஃபிரெண்ட் ஒருத்தனை லவ் பண்றேன். எனக்கு பொண்ணுங்க மேல எந்த ஈர்ப்புமே வரலை டாக்டர். இதைச் சொன்னா என் பேரன்ட்ஸுக்கு புரியலை. எனக்கு ஏதோ ஆண்மைக்குறைபாடு. அத மறைக்கத்தான் இப்படி பொய் சொல்றேன்னு நினைச்சிட்டாங்க. அப்படி எதுவுமே இல்லைன்னு அவங்க தலையில அடிச்சுக்கூட சத்தியம் செஞ்சுட்டேன். அப்பவும் நம்ப மாட்டேங்கிறாங்க. நான் எந்தப் பொண்ணையும் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்கிறதால இப்போ சொத்துல பங்கு தர மாட்டேன், குடும்ப பிசினஸை இனிமே நீ பார்க்கத் தேவையில்லைன்னு சொல்றாங்க. அவங்களுக்கு எப்படியாவது என்னோட நிலைமையைப் புரிய வைக்கணும் டாக்டர். அதுக்கு நீங்கதான் ஹெல்ப் செய்யணும்’ என்றார்.
சொன்னதுபோல, அவருடைய பெற்றோரை என்னிடம் அழைத்து வந்தார். தன்பாலின ஈர்ப்பும் இயல்பான ஒன்றுதான். ஓர் ஆணைத்தான் நேசிக்கிறேன், எனக்கு பெண்கள் மீது எந்த ஈர்ப்பும் இல்லை என்று சொல்லும் உங்கள் மகனை, வற்புறுத்தி ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்காதீர்கள். அப்படிச் செய்தால், அந்தப் பெண்ணுடன் உங்கள் மகனால் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள முடியாது. அந்தப் பெண்ணுடைய வாழ்க்கையே பறிபோகும் என்பதை அறிவியல்பூர்வமாக விளக்கிச் சொன்னேன். அவர்களும் நான் சொன்னதைப் புரிந்துகொண்டார்கள்.

உங்கள் மகனுக்கோ அல்லது மகளுக்கோ தன்பாலின ஈர்ப்பு இருந்தால், அவர்களுடைய விருப்பத்துக்கு செவி கொடுங்கள். குடும்ப கெளரவம், சொத்து என்று அவர்களை மிரட்டி பணிய வைக்காதீர்கள். அது உங்கள் பிள்ளையின் எதிர்காலத்துக்கு மட்டுமல்ல, திருமணம் செய்துகொள்ளும் அந்த மூன்றாம் நபரின் எதிர்காலத்துக்கும் நல்லதல்ல… சற்று யோசியுங்கள்” என்கிறார் டாக்டர் காமராஜ்.