Doctor Vikatan: வேலைக்காக சென்னையில் தங்கியிருக்கிறேன். வீட்டில் சமைத்துச் சாப்பிட முடியாத நிலையில், பெரும்பாலும் வெளி உணவுகளை நம்பிதான் இருக்க வேண்டியுள்ளது. இதனால் அடிக்கடி அஜீரண பிரச்னை வருகிறது. இதைச் சமாளிக்க வீட்டு சிகிச்சை ஏதேனும் உண்டா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் தலத் சலீம்

வெளியே சாப்பிடுவதைத் தவிர்க்கவே முடியாத காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கூடியவரையில், தரமான உணவகங்களில், சுகாதாரமாகத் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவதை உறுதிசெய்து கொள்வது அவசியம்.
வீட்டு உணவுகளைச் சாப்பிடும்போது வயிற்று உப்புசம், வாய்வுத்தொல்லை, ஏப்பம் உள்ளிட்ட எந்தப் பிரச்னைகளும் ஏற்படுவதில்லை. அதுவே, வெளி உணவுகளைச் சாப்பிடும்போது பெரும்பாலானவர்களுக்கு இவற்றில் எல்லாமுமோ, சில பிரச்னைகளோ ஏற்படுகின்றன. அஜீரணம் என்ற பிரச்னையை பலரும் மிகவும் அலட்சியமாகக் கையாள்கிறார்கள்.

சோடா வாங்கிக் குடிப்பது, செரிமானத்துக்கான ஆன்டாசிட் சிரப் அல்லது மாத்திரை சாப்பிடுவது என அதை வழக்கமாகவே வைத்திருப்பவர்கள் பலர். இவை ஏற்படுத்தும் பக்க விளைவுகளை அவர்கள் அறிவதில்லை.
அஜீரண பிரச்னையிலிருந்து வெளியேவர, வீட்டிலேயே எளிமையான வழிகளைப் பின்பற்றலாம். அவற்றில் பக்க விளைவுகளும் இருக்காது. சீரகம், சோம்பு, ஓமம் மூன்றும் தலா 10 கிராம், வெந்தயம் மற்றும் கறுப்பு உப்பு தலா 5 கிராம் எடுத்துக்கொள்ளவும். இவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பொடித்து, சலித்துக்கொள்ளவும்.

இதை, காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும். அஜீரண பிரச்னை தலைதூக்கும்போது இந்தப் பொடியில் ஒரு டீஸ்பூன் அளவை சாப்பிட்டு வெதுவெதுப்பான நீர் குடிக்கலாம். குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் கொடுக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.