ஜெருசலேம்:காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 21 இஸ்ரேல் வீரர்கள் பலியாகினர்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான போர், 100 நாட்களை கடந்து நீடித்து வருகிறது.
அப்பாவி பொதுமக்கள் 25,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை நிறுத்துமாறு உலக நாடுகளும், ஐ.நா., அமைப்பும் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையே நேற்று முன் தினம், காசாவின் மத்திய பகுதியில் உள்ள இரு கட்டங்களை இடிக்க இஸ்ரேல் ராணுவ வீரர்கள் வெடி பொருட்களை தயார் செய்தனர். அப்போது, மறைவிடத்தில் இருந்து ஹமாஸ் பயங்கரவாத குழுவைச் சேர்ந்த ஒருவர், ராக்கெட் வாயிலாக தாக்குதல் நடத்தினர். இஸ்ரேங் ராணுவத்தினர் தயார் நிலையில் வைத்திருந்த வெடி பொருட்கள் மீது, அந்த ராக்கெட் விழுந்ததில் கட்டடம் தரைமட்டமானது.
இதில், கட்டடத்திற்குள் இருந்த 21 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலியாகினர். இதை அந்நாட்டு ராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் அதிக அளவில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலியானது இதுவே முதல் முறை.
முன்னதாக, ஹமாஸ் பயங்கரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நீடிக்கும் என இஸ்ரேல் அரசு அறிவித்திருந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement