புதுடில்லி, குடியரசு தின விழா நாடு முழுதும் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு வானொலி மற்றும் ‘டிவி’ வாயிலாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:
நம் நாட்டின் ஜனநாயக அமைப்பு மேற்கத்திய ஜனநாயகத்தை விட மிகவும் பழமையானது; இது மாற்றத்திற்கான காலம். நம் தேசம் அமிர்த காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் உள்ளது.
சமீபத்தில் கட்டப்பட்ட ராமர் கோவில், மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல, நீதித்துறை செயல்பாட்டின் நம்பிக்கைக்கும் சான்றுஅதே போல், பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா, பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான ஒரு புரட்சிகர கருவியாகும்.
நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல நமக்கு பொன்னான வாய்ப்புகள் உள்ளன. நமது இலக்கை அடைய ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பு முக்கியமானது.
பொதுமக்களின் வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்து கொண்டு பணியாற்றிய பீஹார் மாநில முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் உன்னத சேவைக்கு அஞ்சலி செலுத்துகிறேன். பிற்படுத்தப்பட்டோரின் வாழ்க்கை நலனுக்காக ஓயாமல் உழைத்த அவருக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நம் அன்றாட வாழ்வின் ஒருபகுதியாக மாறி வருகின்றன. இது சகாப்த மாற்றத்திற்கான காலம்.
அரசியல் அமைப்பை உருவாக்க பங்களித்தவர்களுக்கு இன்று நாம் மரியாதை செலுத்துவோம். நாட்டின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை வழங்கிய அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன். நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement