"நான் இப்போ ஒரு குழந்தைக்கு அம்மா… என் உடம்பு அப்படித்தான் இருக்கும்!" – பூர்ணா எக்ஸ்க்ளூசிவ்

நடிகை பூர்ணா… 2004 முதல் 2024 வரை சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இதில் ஸ்பெஷலான விஷயம் என்னவென்றால், இந்த 20 வருடங்களில் ஒரு வருடம் கூட இவரின் படம் வெளியாகாமல் இருந்ததில்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் எனத் தென்னிந்திய மொழிகளில் இடைவிடாது இயங்கிக் கொண்டிருப்பவர். திருமணம் முடிந்து அழகிய மகனைப் பெற்றெடுத்திருக்கிறார். `சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் மிஷ்கின் இசையமைத்திருக்கும் `டெவில்’ படத்தின் இவர்தான் நாயகி. அதன் புரொமோஷனுக்காக கைக்குழந்தையுடன் வந்தவரிடம் ஒரு கேஷுவல் டாக்!

உங்களுக்குப் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம், ‘சவரக்கத்தி’. அந்த டீமோடு ‘டெவில்’ படத்தில் மீண்டும் பணியாற்றிய அனுபவம்?

‘சவரக்கத்தி’ படத்தில் பூர்ணா

“இந்த டீம் குடும்பம் மாதிரி. இத்தனை வருடங்களாகியும் நான் சினிமாவுல இருக்கிறதுக்குக் காரணம் மிஷ்கின் சார்தான். அவர் கொடுத்த தன்னம்பிக்கைதான் என் கரியர். ‘நீ ஸ்லிம்மா இருந்தாலும் பருமனா இருந்தாலும் பரவாயில்லை. நடிக்கிறதை விட்டுடாத. ஹீரோயின்னா இப்படியான ரோல்தான் பண்ணணுங்கிறதை உடைச்சு, நல்ல கதாபாத்திரங்களா பண்ணணும்’னு சொல்லி புரியவெச்சசது அவர்தான். அவருடைய தம்பியும் இயக்குநருமான ஆதித்யா என் அண்ணன் மாதிரி. விதார்த், அருண், நான்… நாங்க மூணு பேரும்தான் படம். ரொம்ப சுவாரஸ்யமான சீட் எட்ஜ் த்ரில்லரா இருக்கும்.

மிஷ்கின் சார் முதன்முறையா இசையமைக்கிற படத்துல நான் இருக்கிறது ரொம்ப சந்தோஷம். அவருடைய இசை இந்தப் படத்துடைய ஹைலைட்டா இருக்கும். ஆதித்யா சாருடைய ‘சவரக்கத்தி’, ‘டெவில்’ இதுக்கு இடையில அவர் எழுதி வெளியான ‘கண்ணாமூச்சி’ வெப் சீரிஸ்னு அவருடைய எல்லா படங்களிலும் நான்தான் ஹீரோயின். நான் என்ன எழுதினாலும் லீட் ரோல்ல  நடிக்கிற பெண் கேரக்டருக்கு பூர்ணான்னுதான் யோசிக்கமுடியுதுனு சொல்வார். அதுக்கு நன்றி. இந்தப் படத்துல நடிக்கும்போதுதான் எனக்குக் கல்யாணமாச்சு, நான் கருவுற்றேன். க்ளைமாக்ஸ் ஷூட் பண்ணும்போது, நான் ஏழு மாத குழந்தை என் வயித்துல இருந்தது. அதனால, இந்தப் படம் எனக்கு ரொம்ப ரொம்ப பர்சனல். என் கால்ஷீட்டுக்காக மத்தவங்க எல்லோரும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டாங்க. ஷூட்டிங்ல என்னை அவ்வளவு பத்திரமா பார்த்துக்கிட்டாங்க.”

‘சவரக்கத்தி’ உங்களுக்கு எந்தளவுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது? 

“எத்தனை படங்களில் நடிச்சாலும் ஒரு ஹீரோயினுக்குத் தேவைப்படுவது ஒரு ஹிட்டுதான். நாம எதிர்ப்பார்க்கிற படம் ஹிட்டாக மாட்டேங்குதுனு எனக்கு ரொம்ப கவலையா இருக்கும். அப்போல்லாம் சினிமாவே வேண்டாம்னு தோணும். ஆனா, அதையெல்லாம்  உடைச்சு, எனக்குப் புரிய வெச்ச படம், ‘சவரக்கத்தி’. இந்தப் படத்துல ரெண்டு குழந்தைகளுக்கு அம்மா, வயித்துல ஒரு குழந்தைனு படம் முழுக்க கர்ப்பிணிப் பெண்ணாகவே நடிச்சிருப்பேன். அந்த கேரக்டர்ல நடிக்கும்போது, கிட்டத்தட்ட 25 நாள்கள் பெரிய வயிறு, மெதுவான நடை, மேனரிஸம்னு நிஜ கர்ப்பிணியாகவே வாழ்ந்தேன். இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிச்சது. ஷூட்டிங் முடிஞ்சவுடன், என் அம்மாக்கிட்ட ‘நான் சீக்கிரம் கர்ப்பிணியாகணும்’னு சொன்னேன். எனக்கு அவ்ளோ ஆசையா இருந்தது.

சில படங்கள்தான் ஷூட்டிங் முடிஞ்சுடுச்சேன்னு வருத்தமா இருக்கும். அப்படி எனக்கு இருந்த ஒரே படம் ‘சவரக்கத்தி’. ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவா நீ நடிக்கணுமானு என்கிட்ட கேட்டாங்க. ஆனா, எனக்கு அந்த சுபத்ராங்கிற கேரக்டர் ரொம்பப் பிடிச்சிருந்தது. உண்மையைச் சொல்லணும்னா, அந்த கேரக்டர்ல நடிக்க நிறைய ஹீரோயின்கிட்ட அணுகியிருக்காங்க. எல்லோரும் நோ சொல்லிட்டாங்க. ஒரு ஹீரோயின் கமிட்டாகி அட்வான்ஸெல்லாம் வாங்கிட்டாங்க. ஆனா, கால்ஷீட் பிரச்னையினால அதைத் திருப்பிக் கொடுத்திட்டாங்க. அதனால, கடைசி ஆப்ஷனா இருந்த என்னை நடிக்க வெச்சாங்க. அவங்க எல்லோரும் நோ சொன்னதுக்கு தேங்க்ஸ் சொல்லணும். என் கரியருடைய மிராக்கிள் இந்தப் படம்!”

‘குண்டூர் காரம்’ படத்துல ‘குறிச்சி மாடத்தபெட்டடி’ பாடல்ல சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்திருந்தீங்க. எப்படி அமைஞ்சது இந்த வாய்ப்பு?

மகேஷ் பாபு – தன் குழந்தையுடன் பூர்ணா

“நான் என் கணவர், குழந்தையோட துபாய்ல வீட்ல இருந்தேன். ஒரு நாள் கோரியோகிராஃபர் சேகர் மாஸ்டர்கிட்ட இருந்து போன். ‘த்ரிவிக்ரம் சார் பேசணும்னு சொன்னாங்க’னு  சொன்னார். நான் ஏதோ கேரக்டர்ல நடிக்கக் கூப்பிடுறாங்க  போலனு யோசிச்சுட்டிருக்கும்போது, ”குண்டூர் காரம்’ படத்துல ஒரு பாடல் இருக்கு. அதுக்கு டான்ஸ் பண்ணக் கூப்பிடுறாங்க’னு  சொன்னார். ‘நான் டெலிவரி முடிஞ்சு, வெயிட் போட்டிருக்கேன். இந்த வெயிட்டை வெச்சு டான்ஸ் எப்படி?’னு கேட்டேன். ‘ரொம்ப முக்கியமான பாட்டு. அதனுடைய ஆரம்பத்துல கொஞ்சம் போர்ஷன் இருக்கு. அதுல நடிச்சு, டான்ஸ் ஆட எக்ஸ்பிரஸிவான  முகம் வேணும். பூர்ணாக்கிட்ட கேளுங்கனு சொன்னார்’னு  சொன்னார். காஸ்ட்யூமெல்லாம் பயந்தேன். உங்களுக்கு எது செளகர்யமோ அதுவே போட்டுக்கலாம்னு சொல்லிட்டாங்க. செட்டுக்குப் போய் த்ரிவிக்ரம் சார்கிட்ட ‘எப்படி நான் சரியா இருப்பேன்னு தோணுச்சு?’னு கேட்டேன். ‘எனக்கு கண்கள், முக பாவனைகள் எல்லாம் சரியா இருக்கணும். திடீர்னு உங்க முகம் ஞாபகம் வந்தது’னு சொன்னார். முதல் ஷாட் எடுக்குற வரை ரொம்ப பதற்றமா இருந்தேன். அதுக்கு பிறகு, எல்லோரும் நம்பிக்கைக் கொடுத்தாங்க. அந்தப் படம் வெளியாகும்போது மக்கள் என்ன நினைப்பாங்களோனு பயந்தேன். ஆனா, பாட்டு செம ஹிட்!”

மகேஷ் பாபு – ஶ்ரீலீலா கூட ஆடினது?

ஶ்ரீலீலா – தன் குழந்தையுடன் பூர்ணா

“ஶ்ரீலீலா என் மோஸ்ட் ஃபேவரைட். அவங்களுடைய முதல் படத்துடைய பாடல்கள், புரொமோ எல்லாம் வந்தப்போ, என் பிரெண்ட்ஸ்கிட்ட ‘இந்தப் பொண்ணு பெரிய ரவுண்டு வரப்போறா’னு சொன்னேன். அந்தச் சமயத்துல தெலுங்குல நிறைய ஹீரோயின்கள் அறிமுகமானாங்க. ஆனா, எனக்கு ஶ்ரீலீலா ரொம்ப பிராமிஸ்ஸிங்கா தெரிஞ்சாங்க. செம எனர்ஜியான பொண்ணு. பிரமாதமான டான்ஸர். நல்லா நடிக்கிறாங்க. எனக்குத் தெரிஞ்சவங்க அவங்க படத்துல வொர்க் பண்ணும்போது, ‘அந்தப் பொண்ணைக் கேட்டேன்னு சொல்லுங்க’னு சொல்லிவிடுவேன். நேர்ல சந்திச்சு நிறைய பேசினோம். ஐ லவ் ஶ்ரீலீலா! மகேஷ் சார் பத்திச் சொல்லவே வேண்டாம். ரொம்பப் பிடிக்கும். ரொம்ப தன்னடக்கமான மனிதர். அவர் கூட ரெண்டாவது முறையா சேர்ந்து நடிக்கிறேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது.”

மகப்பேறுக்குப் பிறகு கொஞ்ச காலம் ரொம்ப முக்கியமானது. ஆனா, நீங்க உடனே நடிக்க ஆரம்பிச்சுட்டீங்களே!

“எனக்கு எல்லாமே என் அம்மாதான். எனக்கு உறுதுணையா இருக்கிறது அவங்கதான். கல்யாணமாகும்போது, என் அம்மா மாதிரி என் வேலைக்கு உறுதுணையா இருக்கிற ஒருத்தர் கிடைக்கணும்னு ரொம்ப பயந்தேன். நான் நினைச்ச மாதிரி எனக்கு அப்படியான கணவர் கிடைச்சார். அவருக்கு நன்றி. டெலிவரியாகி 50வது நாள் ஷூட்டிங் போனேன். அந்தளவுக்கு எனக்கு சப்போர்ட் பண்ணினார். இப்படி ஒருத்தர் கிடைக்க கொடுத்து வெச்சிருக்கணும். டெலிவரியான பிறகு, வெயிட் போடும். சோஷியல் மீடியாவுல என் போட்டோவுக்குக் கீழே, ‘You look like a Pig’னு கமென்ட் பண்றாங்க. நான் இப்போ ஒரு குழந்தைக்கு அம்மா, என் உடம்பு அப்படித்தான் இருக்கும். அதெல்லாம் எதுவும் புரியாமல், தெரியாமல் அப்படி கமென்ட் பண்றாங்க.

நிறைய ஹீரோயின்கள் கல்யாணமான பிறகு, அதனாலதான் சினிமாவுல இருந்து பிரேக் எடுத்து, மறுபடியும் ஸ்லிம்மாகி மீண்டும் வருவாங்க. ஒவ்வொருத்தருடைய உடலும் ஒவ்வொரு மாதிரி. ஆனா, நம்ம நம்பிக்கையை மட்டும் விட்டுவிடக்கூடாது. ‘குண்டூர் காரம்’ பட வாய்ப்பு வந்தபோது, என் கணவர்கிட்ட ‘நான் இப்போ இப்படி குண்டா இருக்கேன். இப்படியே போய் நடிச்சா எல்லோரும் கமென்ட் பண்ணுவாங்க’னு  சொன்னேன். அப்போ அவர்தான் ‘உன்னை நடிக்க கூப்பிட்ட இயக்குநருக்கு இது பத்தி பிரச்னை இல்லைனா, மத்தவங்களை பத்தி ஏன் யோசிக்கிற? உனக்கு ஆதரவா இருக்கிற பாசிட்டிவ்வான மனிதர்களை பத்தி மட்டும் யோசி. அவங்களுக்காக வொர்க் பண்ணு’னு நம்பிக்கை கொடுத்தார். அவர் சொன்ன மாதிரி, நிறைய பாசிட்டிவான கமென்ட்ஸ்தான் வந்தது.”

ஹீரோயினா நடிச்சுக்கிட்டிருக்கீங்க. அதே சமயம், நிறைய படங்கள்ல கேரக்டர் ரோல்களும் பண்றீங்க. எப்படி?

பூர்ணா

“நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி, நான் ஹீரோயின், கேரக்டர் ரோல் பார்க்கிறதில்லை. நான் நடிக்கிற கேரக்டர் படத்துல என்ன பண்ணும், எனக்குப் பிடிச்சிருக்கா அவ்வளவுதான். லவ் பண்றது, டூயட் பாடுறதுங்கிற ஜோன் முடிஞ்சுடுச்சுனு எங்கேயோ ஒரு டைம்ல எனக்கே தோணிடுச்சு. சில சமயங்கள்ல ஹீரோயினை விட மற்ற கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும். தெலுங்குல பாலகிருஷ்ணா சாருடைய ‘அகண்டா’ படத்துல ஒரு ஐபிஎஸ் ஆபீஸர் கேரக்டர்ல நடிச்சேன். அது எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்சது. படமும் பெரிய ஹிட். அந்தப் படம் நாம கேரக்டர் ரோல்ல நடிக்கலாம்ங்கிற துணிச்சலையும் நம்பிக்கையையும் கொடுத்தது.

நான் சினிமாவுக்கு வரும்போதே ஹீரோயினா வரலை. பிரெண்ட், தங்கச்சினு நடிச்சு முடிச்சு அப்புறம்தான் ஹீரோயினானேன். அதனாலயோ என்னவோ, என்னால கேரக்டர் ரோல்களும் பண்ணமுடியுங்கிற நம்பிக்கை வந்திருக்கும்னு நினைக்கிறேன். கல்யாணத்துக்குப் பிறகு, எனக்கு பட வாய்ப்புகள் குறையும்னு நினைச்சேன். ஆனா, தொடர்ந்து ஆஃபர்கள் வந்துக்கிட்டுதான் இருக்கு. இப்போ குடும்பத்தை கவனிக்கணும், குழந்தை கூட நேரம் செலவழிக்கணும்னு பொறுப்புகள் கூடியிருக்கு. அதே சமயம், இதுக்கு முன்னாடி பண்ணின சில விஷயங்களை இனிமே பண்ணக்கூடாதுனு நானே நினைச்சிருக்கேன். நல்ல கேரக்டர்கள் வந்தால் நிச்சயமா நடிப்பேன்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.