உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு முறையையே ஒழித்துக்கட்டும் வகையில் யூ.ஜி.சி வெளியிட்ட வரைவு அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடரும் என மத்திய அரசு பின்வாங்கியிருக்கிறது. அதேசமயம், தனது அதிகார வரம்பை மீறி இட ஒதுக்கீட்டை கபளிகரம் செய்யும்வகையில் பரிந்துரை செய்த யூ.ஜி.சி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வியும் வலுவாக எழுந்திருக்கிறது.

சர்ச்சையை ஏற்படுத்திய யூ.ஜி.சி வரைவு அறிக்கை:
மத்திய அரசின் மத்தியப் பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்புவது குறித்த வரைவு விதிகளை பல்கலைக்கழக மானியக்குழு (UGC – University Grants Commission) வெளியிட்டிருக்கிறது. அதில், உயர்கல்வி நிறுவனங்களில் காலியாக இருக்கும் குரூப் ஏ, பி, சி, டி ஆகிய பிரிவுகளின் பணியிடங்களை இட ஒதுக்கீடு முறையில் நிரப்புவதற்கு பொதுவான தடை இருப்பதாகவும், இந்தக் காலிப் பணியிடங்களை பொது நலன் கருதி தொடர அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தது. குறிப்பாக, `உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்பும் போது, அந்தப் பணியிடத்தை நிரப்ப போதுமான விண்ணப்பங்களோ, தகுதியான ஆட்களோ கிடைக்காத பட்சத்தில், அந்தப் பணியிடத்திற்கான இட ஒதுக்கீட்டை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் ரத்து செய்யலாம்’ என சர்ச்சைக்குரிய வகையில் பரிந்துரைத்திருக்கிறது. அதாவது, ஓ.பி.சி., எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு ஒதுக்கிய இடங்களை நிரப்ப போதுமான ஆட்கள் கிடைக்கவில்லையெனில், அந்த இடங்களை பொதுப்பிரிவுக்கு மாற்றி அதில் தகுதியானவர்களை கொண்டு நிரப்பலாம்!” என தெரிவித்திருப்பதுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
எதிர்ப்பு தெரிவித்த அரசியல் தலைவர்கள்:
இதையடுத்து கண்டன அறிக்கை வெளியிட்ட பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, “தலைமுறை தலைமுறையாக கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால் குறிப்பிட்ட சமூகம் கல்வியில் பின்தங்கியே இருக்கின்றனர் என்பதை இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஏற்றுள்ளது. அந்த மக்கள் மீண்டு வர அனைத்து நிலைகளிலும், அனைத்து துறைகளிலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அறிவுறுத்தியுள்ளது. இட ஒதுக்கீட்டுக்கான அடிப்படை இதுதான். உயர்கல்வி நிறுவனத்தால் இட ஒதுக்கீடு பிரிவில் பொருத்தமான நபர்களை அடையாளம் காணமுடியவில்லை என்றாலோ அல்லது ஒதுக்கப்பட்ட பிரிவை சேர்ந்த யாரும் குறிப்பிட்ட பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என்றாலோ அவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்வதில் அரசு மற்றும் சம்பந்தப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் தோல்வியைக் காட்டுகிறது. யூ.ஜி.சி-யின் வழிகாட்டுதல்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீடு நோக்கத்துக்கு எதிராக உள்ளது. யூ.ஜி.சி குழு வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டுதல்களை திரும்பப் பெற வேண்டும்!” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், “பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் ஒட்டுமொத்த கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினரின் இட ஒதுக்கீட்டையே ஒழித்துக் கட்டுவதற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது. ஒருபுறம் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவுகளைச் சேர்ந்த உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் கல்வி உதவித்தொகை பாஜக அரசால் நிறுத்தப்படுகிறது. இன்னொரு புறம் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு காலி செய்யப்படுகிறது. இது பா.ஜ.க-வை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ் மனுவாத கொள்கையின் வெளிப்பாடே ஆகும். எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினர் படிக்கக் கூடாது என்பதுதான் மனுவாத சதித்திட்டம். அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம். பார்ப்பனர் அல்லாதார் அனைவரையும் தற்குறிகளாக மாற்ற முயற்சிக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்தப் புதிய வழிகாட்டு விதிகளை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

அதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, “யூ.ஜி.சியின் புதிய வரைவில், உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர சதி நடக்கிறது. இன்று, 45 மத்தியப் பல்கலைக்கழகங்களில் தோராயமாக 7,000 இடஒதுக்கீட்டுப் பணியிடங்களில், 3,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 7.1% மட்டுமே தலித், 1.6% பழங்குடியினர் மற்றும் 4.5% பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பேராசிரியர்கள் இருக்கின்றனர். இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூட பேசிய பாஜக-ஆர்எஸ்எஸ், இப்போது இதுபோன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வேலையைப் பறிக்க நினைக்கின்றன. சமூக நீதிக்காகப் போராடும் மாவீரர்களின் கனவுகளைக் கொல்லவும், தாழ்த்தப்பட்ட பிரிவினரின் பங்களிப்பை இல்லாதொழிக்கவும் செய்யும் ஒரு முயற்சி. இதுதான் `அடையாள அரசியலுக்கும்’, `உண்மையான நீதி’க்கும் உள்ள வித்தியாசம்! இதுதான் பாஜகவின் குணாதிசயம். காங்கிரஸ் இதை ஒருபோதும் அனுமதிக்காது. சமூக நீதிக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

இதேபோல, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தி.மு.க அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோரும் கடுமையாக எதிரிப்பு தெரிவித்திருக்கின்றனர். தொடர்ந்து டெல்லி ஜே.என்.யு மாணவர் சங்கம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்பினர் யூ.ஜி.சிக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அடுத்தடுத்து அறிவித்தனர்.
பணிந்த மத்திய அரசு, பின்வாங்கிய யூ.ஜி.சி:
அடுத்தடுத்து அரசியல் தலைவர்களின் எதிர்ப்புகள், சமூக நீதி இயக்கங்கள், மாணவர் அமைப்புகளின் போராட்ட அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த மத்திய கல்வி அமைச்சகம் தனது எக்ஸ் தளத்தில், “மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பிரிவில் இடஒதுக்கீடு) சட்டம், 2019-ன் படி, ஆசிரியர் பணியிடங்களில் உள்ள அனைத்து நேரடி ஆட்சேர்ப்புக்கான பணிகளுக்கும் மத்திய கல்வி நிறுவனங்களில்(CEI) இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இடஒதுக்கீடு பதவிகள் எதிலும் இட ஒதுக்கீடு நீக்கம் செய்யப்படக் கூடாது. 2019 சட்டத்தின்படி கண்டிப்பாக காலியிடங்களை நிரப்புமாறு மத்திய கல்வி அமைச்சகம் அனைத்து மத்திய கல்வி நிறுவனங்களுக்கும் உத்தரவுகளை வழங்கியிருக்கிறது” எனக் குறிப்பிட்டு `இட ஒதுக்கீடு முறை நீக்கப்படாது’ எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.

அதேபோல மத்திய கல்வி அமைச்சகத்தின் இந்தப் பதிவை எக்ஸ் தளத்தில் மேற்கோள் காட்டியிருக்கும் யூ.ஜி.சி இந்தியா, “கடந்த காலங்களில் மத்திய கல்வி நிறுவனங்களில் (CEI) இட ஒதுக்கீடு பிரிவு பதவிகளுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படவில்லை. அத்தகைய இட ஒதுக்கீடு நீக்கம் இருக்காது. அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு பிரிவிலுள்ள அனைத்து காலிப் பணியிடங்களும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் நிரப்பப்படும்” என்று யூ.ஜி.சி தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் பெயரில் பதிவிட்டிருக்கிறது.
“This is to clarify that there has been no de-reservation of reserved category positions in Central Educational Institutions (CEI) in the past and there is going to be no such de-reservation. It is important for all HEIs to ensure that all backlog positions in reserved category… https://t.co/ApGNX8YWHy
— UGC INDIA (@ugc_india) January 28, 2024
யூ.ஜி.சி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
இந்த நிலையில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்ட வரைவு விதிகளை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். இதே குரல் பல்வேறு தரப்பிலிருந்தும் ஒலிக்கத் தொடங்கிய நிலையில், பல்கலைக்கழக மானியக்குழு அதன் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியது. மத்திய அரசும் விளக்கமளித்தது. அதன் காரணமாக சமூகநீதி தொடர்பான சர்ச்சைக்கு முடிவு கட்டப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. அதே நேரத்தில் தேவையே இல்லாமல் இத்தகைய சர்ச்சை எழுப்பப்பட்டது ஏன்? அதிகார வரம்பை மீறி அத்தகைய சர்ச்சையை ஏற்படுத்திய பல்கலைக்கழக மானியக்குழு மீது என்ன நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கப் போகிறது?” என சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும், “பல்கலைக்கழக மானியக் குழுவின் பணி என்பது உயர்கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதுதான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அனுமதிக்கப்பட்டு, நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இது தெரிந்திருந்தும் பல்கலைக்கழக மானியக்குழு வரைவு விதிகளை வெளியிட்டது ஏன்? அதன் மீது கடந்த ஒரு மாதமாக கருத்துகள் கேட்கப்பட்டதை மத்திய அரசு வேடிக்கை பார்த்தது ஏன்? ஒருவேளை எந்த எதிர்ப்பும் எழுந்திருக்காவிட்டால், வரைவு விதிகள் இறுதி விதிகளாக மாற்றப்பட்டு, உயர்கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு சட்டவிரோதமாக ரத்து செய்யப்பட்டிருக்குமா, இல்லையா? மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு குறித்து தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்திய பல்கலைக்கழக மானியக்குழுவின் நிர்வாகிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என கோரிக்கை விடுத்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY