வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அஜித் பவார் அணியை தேசியவாத காங்கிரஸ் கட்சியாக அங்கீகரித்த விவகாரத்தில், 2 வாரத்துக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில், முக்கிய கட்சியான சிவசேனா கட்சியில் திடீரென ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணி உருவானது. இந்த அணி பா.ஜ.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. இதையடுத்து உத்தவ் தலைமையிலான சிவசேனா, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி என இரண்டாக உடைந்தது.
இது தொடர்பான வழக்கில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சியே உண்மையான சிவசேனா என அறிவித்தது.
அதேபோல், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து அஜித்பவார் சில ஆதரவு எம்எல்ஏ.,க்களுடன் பா.ஜ., கூட்டணியில் இணைந்து துணை முதல்வரானார். இதனைத்தொடர்ந்து சரத் பவார் தரப்புக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அஜித் பவார் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 6ம் தேதி அங்கீகரித்தது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான ‘கடிகாரம்’ அஜித் பவார் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், சரத் பவார் அணிக்கு ‘தேசியவாத காங்கிரஸ் – சரத் சந்திர பவார்’ என்றும் புதிய பெயர் சூட்டவும் தேர்தல் ஆணையம் அனுமதியளித்தது.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னம் மற்றும் பெயரை அஜித் பவார் தரப்பு பயன்படுத்த தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சரத்பவார் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,‛‛ சரத் பவாரின் மேல்முறையீடு மனுவுக்கு 2 வாரங்களுக்குள் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement