Government plan to divide Bengaluru Corporation into 3 | பெங்களூரு மாநகராட்சியை 3 ஆக பிரிக்க அரசு திட்டம்

பெங்களூரு:பெங்களூரு மாநகராட்சியை மூன்றாக பிரிப்பதற்கு, கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. பெங்களூரு மாநகராட்சிக்கு, கடைசியாக 2015ல் தேர்தல் நடந்தது. அப்போது தேர்வான கவுன்சிலர்களின் பதவிக்காலம், 2020 செப்டம்பருடன் நிறைவு பெற்றது.

சட்டசபை தேர்தல்

அதன்பின், இன்று வரை மாநகராட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தல் நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதும், வார்டுகள் எண்ணிக்கையை 198ல் இருந்து, 243ஆக உயர்த்தி, முந்தைய பா.ஜ., அரசு புதிய சட்டம் கொண்டு வந்தது.

கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலால், மாநகராட்சி தேர்தலை நடத்தவில்லை. தற்போது, காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், வார்டுகளின் எண்ணிக்கை, 243ல் இருந்து, 225 ஆக குறைத்து சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், பெங்களூரு நகரில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருவதாலும், நகரின் எல்லை விரிவடைந்து கொண்டே செல்வதாலும், நிர்வாக வசதிக்காக, மாநகராட்சியை மூன்றாக பிரிப்பதற்கு காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.இதற்கு முன், 2013 – 18ல் சித்தராமையா முதல்வராக இருந்த போதே, பெங்களூரு மாநகராட்சி மூன்றாக பிரிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். தற்போது, அதை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக உள்ளார்.

இதற்காக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பி.எஸ்.பாட்டீல் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி விரைவில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பு சட்டம்

துணை முதல்வர் சிவகுமாரும், மாநகராட்சியை மூன்றாக பிரிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, லோக்சபா தேர்தலுக்கு பின் நடக்கும் சட்டசபை கூட்டத்தொடரில், சிறப்பு
சட்டம் கொண்டு வர அரசு ஆலோசிக்கிறது.எனவே, ‘இப்போதைக்கு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தும் வாய்ப்புகள் இல்லை’ என்று, மாநில தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.