ராஞ்சி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு ஜார்க்கண்ட்டின் சாய்பசா நகரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித் ஷாவை கொலை குற்றவாளி என குறிப்பிட்டுப் பேசினார். அவரது இந்தப் பேச்சுக்கு எதிராக பாஜக தலைவர் நவீன் ஜா, கீழ் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். பின்னர் இந்த வழக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
வழக்கு நீதிபதி அம்புஜ்நாத் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராகுல் காந்தி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், ராகுல் காந்தி பேசியதன் எழுத்து வடிவம் கடந்த 16-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனது தீர்ப்பை நிறுத்திவைத்தார். இன்று தீர்ப்பளித்த நீதிபதி அம்புஜ்நாத், வழக்கை ரத்து செய்யக் கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதேபோல், கடந்த 2018-ம் ஆண்டு மே 8-ம் தேதி, பெங்களூருவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமித் ஷாவுக்கு எதிராக ராகுல் காந்தி பேசிய பேச்சுக்காக அதே ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி அவர் மீது அவதூறு வழக்கு பதியப்பட்டது. பாஜக தலைவர் விஜய் மிஷ்ரா இந்த வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் கடந்த 20-ம் தேதி ராகுல் காந்திக்கு சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.