நாட்டையே அதிரவைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை, கோவை மகளிர் நீதிபதி முன்னிலையில் நடந்து வருகிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணைக்காக, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் சுமார் ஓராண்டுக்குப் பிறகு, கைதுசெய்யப்பட்ட திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன், மணிவண்ணன், பாபு, அருளானந்தம், அருண்குமார், ஹெரன் பால் ஆகிய 9 பேரும் இன்று நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதற்காக காலை சேலம் மத்திய சிறையிலிருந்து கோவை நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டனர். சிலர் முகத்தை மூடி வந்தநிலையில், சிலர் சிரித்துக் கொண்டே வந்தனர். பாலியல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வீடியோக்கள் குறித்த விசாரணை நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே சி.பி.ஐ கடந்த 2019-ம் ஆண்டு கோவை மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.



மேலும், கடந்த 2021-ம் ஆண்டு கூடுதல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட 8 பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில், கைதுசெய்யப்பட்ட 9 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து அடுத்த விசாரணையை மார்ச் 1-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.