`ஐகோர்ட்டின் ஒரு அமர்வு வழங்கிய ஜாமீனை மற்றொரு அமர்வு ரத்து செய்ய முடியுமா?’ – உச்ச நீதிமன்றம்

மத்திய பிரதேசம், ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள தினாரா காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் (IPC)) பிரிவு 419, 420, 467, 468, 470, 471 மற்றும் பிரிவு 25/27 இந்திய ஆயுதச் சட்டம் 1959இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட இருவரும் குவாலியரில் உள்ள மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ஒருவருக்கு செப். 8, 2022 அன்றும், மற்றொருவருக்கு நவ. 14, 2022 அன்றும் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

ஜாமீன் மனு

இந்நிலையில், குற்றம்  சாட்டப்பட்டவர்களுக்கு  வழங்கப்பட்ட  ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கமான நடைமுறையாக, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Cr.PC)  பிரிவு 439 (2)இன் கீழ் மாநில அரசு ஒரு மனுவைத் தாக்கல்  செய்தது. இம்மனு அதே உயர் நீதிமன்றத்தின் மற்றொரு தனி நீதிபதியின் முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், டிச. 12, 2023 அன்று, இருவருக்கும் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென்ற இந்த வழக்கில் இந்த வாரம் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்  பி.ஆர்.கவாய்  மற்றும்  சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, `ஒரு தனி நீதிபதியின் ஜாமீன் உத்தரவை, அதே உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த மற்றொரு தனி நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டிருப்பது நீதித்துறையின் முறைகேடு \ ஒழுக்கமின்மையைக் காட்டுகிறது.’ எனத் தெரிவித்துள்ளார்கள்.

மேலும், “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு  ஜாமீன் வழங்கும் உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை,  மற்றொரு  தனி நீதிபதி மறுபரிசீலனை செய்யும் செயல் முறையற்றது”  என்றும் கூறி கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், `குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய விண்ணப்பம், ஜாமீன் வழங்கிய நீதிபதியின் முன் பட்டியலிடப்படாமல், அதே நீதிமன்றத்தின் வேறொரு தனி நீதிபதியின் முன் பட்டியலிடப்பட்டு, விசாரணைக்கு எடுக்கப்பட்டு, தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது மிகவும் ஆச்சரியமளிப்பதாய் உள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்

இந்நிலையில், ஜாமீனை ரத்து செய்த நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் அப்துல் பாசித் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எனவும், அரசுத் தரப்பு இந்த நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்த உண்மைகள், நீதிமன்றம் பொருத்தமானதாக கருதக் கூடியவகையில் இருந்ததால், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அப்துல் பாசித் வழக்கில் உள்ள முன்தீர்ப்பானது, ஜாமீன் வழங்குவது மற்றும் அதனை ரத்து செய்வது குறித்த பரிசீலனைகள் முற்றிலும் வேறுபட்டவையாகும். ஜாமீனை ரத்து செய்வதற்கு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர் கீழ்கண்ட ஏதேனும் ஒரு செயலில் ஈடுபட்டிருக்கவேண்டும்.

1) குற்றம் சாட்டப்பட்டவர் மீது நீதிமன்றம் அதிருப்தி அடைந்தால்  ஜாமீனை ரத்து செய்யலாம். அதாவது, அவருக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவது: (2) ஜாமீன் உத்தரவின் நிபந்தனைகளை மீறியது; (3) ஜாமீன் வழங்க நீதிமன்றத்தின் அதிகாரங்களை, சட்ட விதிகளை அறியாமல் ஜாமீன் வழங்கப்பட்டது; (4) அல்லது ஜாமீன் தவறாக அல்லது மோசடி மூலம் வாங்கப்பட்டது.” என்பன போன்றவைதான் ஜாமீனை ரத்து செய்வதற்கான காரணங்கள் எனவும், ஆனால் இந்த வழக்கில் ஜாமீனை ரத்து செய்வதற்கான மேற்கூறிய நிபந்தனைகள் எதுவும் இல்லை எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 362 (Cr.P.C.), ஒரு உயர் நீதிமன்றம் தனது சொந்த வழக்குகளை மறுபரிசீலனை செய்ய முடியாது என்ற ஒரு தடையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த ஜாமீனை ரத்து செய்த வழக்கில் இந்த பிரிவு மீறப்பட்டுள்ளது. மேலும்,  “நீதிமன்றத்தால்  ஒரு விஷயம் இறுதியாகத் தீர்க்கப்படும்போது, நீதிமன்றம், நேரடியான சட்டப்பூர்வ ஏற்பாடு இல்லாத நிலையில், செயல்பாட்டு  அதிகாரியாக மட்டுமே இருக்கும்

மேலும் “ஜாமீன் வழங்கும் தீர்ப்பு மற்றும் உத்தரவை  நீதிமன்றத்தால் மறுபரிசீலனை செய்ய முடியாது என்பதாலும், இதுகுறித்து, சட்டத்தில் எந்த ஒரு வெளிப்படையான விதியும்  இல்லாத நிலையில், அத்தகைய தீர்ப்பு மற்றும் உத்தரவை  பிறப்பிக்கமுடியாது.

தீர்ப்பு

ஒரு நீதிமன்றத்தால் தீர்க்கப்படும் வழக்குகளில்  ஏதேனும்  மாற்றம் அல்லது மறுபரிசீலனை செய்வதற்கு சட்டத்தின் பிரிவு  362 தடையாக செயல்பட்ட போதிலும், ஒரு விதிவிலக்கு மட்டும் உள்ளது. அதாவது, நீதிமன்ற எழுத்தர் செய்த பிழைகள் மற்றும் எண்கணித பிழைகளை மட்டுமே சரிசெய்ய இந்த பிரிவு அனுமதி அளிக்கிறது.”, என உச்ச நீதிமன்றம் அப்துல் பாசித் வழக்கில் கூறியுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.