நொய்டா:புதுடில்லி அருகே 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 80 புதிய மொபைல் போன்களை திருடிய வேன் டிரைவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 72 போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராஜஸ்தானை சேர்ந்த ரவி கவுர், 27, தினேஷ், 24, அனில் குமார், 25. மூவரும் புதுடில்லி அருகே நொய்டாவின் லக்கன்பூரில் வசித்தனர்.
பிரபல மொபைல் போன் நிறுவனமான ‘சாம்சங்’ நிறுவனத்தின் சரக்குகளை கையாளும் ‘ஷேடோபெக்ஸ் டெக்னாலஜி லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனத்தில் ரவி கவுர் டிரைவராக இருந்தார். மற்ற இருவரும் ரவியின் நண்பர்கள்.
கடந்த 8 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருந்து நொய்டாவுக்கு சாம்சங் நிறுவனத்தின் ‘ஏ 50’ 5ஜி மாடல் மொபைல் போன்களை ஒரு வேனில் ரவி ஏற்றிச் சென்றார்.
செல்லும் வழியில் வேனில் இருந்து 80 போன்களை திருடி தன் நண்பர்கள் தினேஷ் மற்றும் அனில் குமாரிடம் கொடுத்து அனுப்பினார்.
போன்கள் மாயமானது குறித்து, லாஜிஸ்டிக்ஸ் நிறுவன மேலாளர் ஜிதேந்திர சிங், சூரஜ்பூர் போலீசில் புகார் செய்தார்.
விசாரணை நடத்திய போலீசார், டிரைவர் ரவி கவுர் மற்றும் அவரது நண்பர்கள் தினேஷ், அனில் குமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 72 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மூவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
திருடப்பட்ட போன்களின் மதிப்பு 15 லட்சம் ரூபாய் எனவும், அவர்கள் விற்பனை செய்த எட்டு மொபைல் போன்களை மீட்கும் பணிகள் நடந்து வருவதாகவும் போலீசார் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement