ரூ.1.10 கோடி மான நஷ்டஈடு கோரி ஏ.வி.ராஜுவுக்கு எதிராக அதிமுக வழக்கு @ உயர் நீதிமன்றம்

சென்னை: அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுவுக்கு எதிராக ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு கோரி, சேலம் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு, கூவத்தூர் சம்பவத்தில் என்னை தொடர்புபடுத்தி பேசியுள்ளார். மேலும், வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று நான் மோசடி செய்ததாகவும் கூறியுள்ளார்.

எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் என் மீது இந்த குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தியுள்ளார். இதன் காரணமாக, இத்தனை ஆண்டுகளாக பொது வாழ்வில் சேர்த்து வைத்திருந்த நற்பெயருக்கு ராஜு களங்கம் ஏற்படுத்தியுள்ளார்.

பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என எங்களது பொதுச்செயலாளர் ஜெயலலிதா கற்றுக் கொடுத்துள்ளார். ஆனால், அதிமுகவில் இத்தனை ஆண்டு காலமாக இருந்த ஏ.வி. ராஜு இதனை மறந்து பெண்ணுக்கு எதிரான கருத்தை கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், அதிமுகவுக்கு என்று பிரத்யேகமான பெண்கள் ஆதரவு இருந்தது. ராஜுவின் பேச்சால் தற்போது அந்த ஆதரவு பாதிக்கப்பட்டுள்ளது. ராஜுவின் இந்த பேச்சால் தனது நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு, நஷ்ட ஈடாக ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், ராஜுவின் பேச்சை நீக்க வேண்டும் என கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.