The twins born in 6 months were saved by the doctors who fought for 2 months | 6 மாதத்தில் பிறந்த இரட்டையர்கள் 2 மாதம் போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்

பெலகாவி : சிக்கோடியில் ஆறே மாதங்களில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளுக்கு, இரண்டரை மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை அளித்து, மருத்துவர்கள் காப்பாற்றி உள்ளனர்.

பெலகாவி மாவட்டம், சிக்கோடியை சேர்ந்த வங்கி ஊழியர் சித்தப்பா. இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு, கடந்த 2023 டிசம்பர் 26ம் தேதியன்று, இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.

பத்து மாதங்களில், தாயின் கருவில் இருந்து வெளியே வர வேண்டிய குழந்தைகள், ஆறு மாதங்களிலேயே சுகப்பிரசவத்தில் வெளியே வந்தனர்.

அப்போது குழந்தைகளின் எடை 830, 890 கிராம் ஆக இருந்தது. உடல் எடை குறைவாக இருந்ததால், சிக்கோடியில் உள்ள திவ்யம் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகள் நல டாக்டர் அமித் மகதும் இரண்டு மாதங்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து, இரு குழந்தைகளையும் குணப்படுத்தினார்.

தற்போது குழந்தைகள் 1,600, 1,580 கிலோ எடையில், உடல் நிலை சீராக உள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் குழந்தைகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து டாக்டர் சந்தியா கூறியதாவது:

சிசுவை சுற்றியுள்ள பனிக்குடம் வெடிப்பது, முந்தைய குறைப்பிரசவ நிகழ்வு, தாயின் சீரற்ற உணவுப் பழக்கம், உயர் ரத்த அழுத்தம், மன உளைச்சல், மரபணு குறைபாடுகள் உள்ளிட்டவை குறைபிரசவத்திற்கு வழிவகுக்கின்றன.

இன்குபேட்டர், வென்டிலேட்டர் சிஸ்டம் மற்றும் திறமையான நர்சிங் ஊழியர்கள் இருந்தால் மட்டுமே இதுபோன்ற குழந்தைகளை காப்பாற்ற முடியும்.

கருப்பையில் இரட்டை கருக்கள் இருந்ததால், 14 வாரங்களில் கருப்பையில் தையல் போடப்பட்டது. தைக்காமல் விட்டால், கருக்கள் நழுவி கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். திட்டமிட்டபடி 26வது வாரத்தில் பிரசவம் நடந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.