திண்டுக்கல்: மக்களை பிரித்தாலும் பாஜக ஆட்சி மீண்டும் வந்துவிடக்கூடாது. மீண்டும் வந்தால் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள், குழந்தைகள்தான் என திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பேசினார்.
உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் திண்டுக்கல்லில் சனிக்கிழமை (மார்ச் 9) மகளிர் அணி நிர்வாகிகள் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய அவர், “தேர்தல் நேரத்தில் சிலிண்டர் விலையை குறைத்தால் ஓட்டுப்போடுவார்கள் என பிரதமர் மோடி கனவு காண்கிறார். தமிழ்நாட்டு பெண்கள் ஏமாற தயாராக இல்லை. பெண்களுக்காக நடத்தப்படக்கூடிய ஆட்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி.
பல மாநிலங்களுக்கு செல்லும் பிரதமர் இதுவரை மணிப்பூர் செல்லவில்லை. மணிப்பூரில் பாஜகவின் பிரித்தாலும் சூழ்ச்சியால் மக்கள் இன்றும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் வாழும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. உத்தரபிரதேசத்தில் நடைபெறும் ஆட்சியில் பெண்கள் கொடூரமாக பாதிப்புக்குள்ளாகின்றனர். குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் இரண்டு மடங்கு பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளது. இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடையாது.
தமிழ்நாட்டில் நான் முதல்வன் என்ற திட்டத்தை கொண்டுவந்து வேலை கிடைக்கும் வாய்ப்பை உருவாக்கித்தந்துள்ளார் முதல்வர். தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு இன்றுவரை ஒரு ரூபாய் நிதி கூட தரவில்லை.
நீங்கள் கொடுக்காவிட்டாலும் என் மக்களை நான் பாதுகாப்பேன் என தமிழ்நாடு முதல்வர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 வழங்கினார். தேசிய ஊரக வேலைத்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்துக்கட்டி வருகிறது மத்திய அரசு.
மக்களை பிரித்தாலும் பாஜக ஆட்சி மீண்டும் வந்துவிடக்கூடாது. இந்த தேர்தலை இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என நினைத்து எதிர்கொள்ளவேண்டும்.
பாஜக ஆட்சி மீண்டும் வந்தால் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள் தான். நமது குழந்தைகளின் எதிர்காலத்தை காப்பாற்ற, மகளிர் உரிமைகளை பாதுகாக்க, பாஜக., ஆட்சி வரவிடாமல் பணிசெய்வோம்” என்று கனிமொழி பேசினார்