Tamil News Live Today: தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா!

தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா!

மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணையர்களுள் ஒருவரான அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார்.

அருண் கோயல்

இந்திய தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக உள்ள நிலையில், தற்போது மற்றும் ஒரு தேர்தல் ஆணையர் பதவியும் காலியாகியுள்ளது. மூன்று பேர் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது தலைமை தேர்தல் ஆணையர் மட்டுமே உள்ளார். தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குக் குழு அமைத்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கிய தி.மு.க., தொகுதிப் பங்கீட்டில்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மற்றும் கொ.ம.தே.க, மதிமுக-வுக்கு தலா ஒரு இடமும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக-வுக்கு தலா இரண்டு இடங்களும் ஒதுக்கியது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் இடம் ஒதுக்கப்படவில்லை. எனினும் கூட்டணியில் இருப்பதாக தெரிவித்த கமல், வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாகவும் , தங்களின் கட்சிக்கு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி உடனான பேச்சுவார்த்தை மட்டும் தொடர்ந்து நீடித்து வந்தது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி, தமிழநாட்டில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளது.

பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி!

சந்திரபாபு நாயுடு

மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. மத்தியில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இணையும் கட்சிகள் டெல்லியில் முகாமிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பாஜக கூட்டணியில் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது. மேலும் பவன் கல்யாணின் ஜன சேன கட்சியும் கூட்டணியின் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது!

`இந்தத் தேர்தலில் நான் போட்டியிடுவதாக இல்லை. என் கட்சியும் அப்படித்தான்’ – கமல்

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மற்றும் கொ.ம.தே.க, மதிமுக-வுக்கு தலா ஒரு இடமும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக-வுக்கு தலா இரண்டு இடங்களும் ஒதுக்கப்பட்டிருந்தது. மேலும், ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகு திமுக-வுக்கு ஆதரவாக இருந்துவந்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவந்தார்.

இந்த நிலையில், அறிவாலயத்தில் இன்று நடந்த பேச்சுவார்தையின் முடிவில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கூட்டணியில் திமுக ஒரு மாநிலங்களை சீட் ஒதுக்கியிருக்கிறது. பின்னர், செய்தியாளர்களிடம் இதுபற்றி பேசிய கமல்ஹாசன், “இந்தத் தேர்தலில் நான் போட்டியிடுவதாக இல்லை. என் கட்சியும் அப்படித்தான். ஆனால், இந்தக் கூட்டணிக்கு எங்களின் அனைத்து ஒத்துழைப்பும் இருக்கும்” என்று கூறினார். மேலும், திமுக – மக்கள் நீதி மய்யம் ஒப்பந்தத்தில், வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் பிரசாரம் மேற்கொள்ளும் என்றும், 2025 ராஜ்ய சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சென்னையில் அமலாக்கத்துறை ரெய்டு!

சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடைப்நெற்று வருகிறது. அருணாச்சலா இம்பெக்ஸ் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் ரெய்டு செற்று வருகிறது. அந்நிறுவனத்தின் உரிமையாளரான செல்வராஜ் வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடைபெறுகிறது.

ஆதவ் அர்ஜுனா

அதேபோல, சமீபத்தில் விசிக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஆதவ் அர்ஜுன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்திவருகின்றனர். தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையிலுள்ள ஆதவ் அர்ஜுன் வீட்டில் இந்த சோதனை நடைபெற்றது. இதுமட்டுமல்லாமல், சென்னை ஆர்.ஏ.புரம், வேப்பேரி உட்பட நான்கு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். இதில், வேப்பேரி ஈ.வி.கே சம்பத் சாலையில் பிரின்ஸ் கார்டன் பகுதியில் மகாவீர் ரானி என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.