`மனிதர்களின் தவறான எண்ணம், இறந்தகாலத்தைக் குழப்புகிறது. எதிர்காலத்தை அச்சுறுத்துகிறது. நிகழ்காலத்தை அதனுள் நுழைய முடியாத சுமையாக மாற்றுகிறது.’ – அமெரிக்கக் கவிஞர் மாயா ஏஞ்சலோ.
தினமும் ஏதாவது ஒரு பிரச்னை மனிதர்களை வதைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்தக் கவலையை மனதில் ஏற்றிக்கொள்பவர்கள் படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல. `இதுக்குப்போய் ஒரு விளக்கமா… யாருக்குத்தான் கவலை இல்லை?’ என்று கேட்கலாம். மனித வாழ்க்கையே ஒரு போராட்டம்தான். மறுப்பதற்கில்லை. அதில் கவலைகளுக்கு இடம் கொடுத்தால், அதிலேயே மூழ்கிக் காணாமல்போய்விடுவோம். எதிர்காலத்தையோ, இறந்தகாலத்தையோ பற்றி யோசிக்காமல், நிகழ்காலத்தை மட்டும் அனுபவித்து வாழ்பவர்களுக்கு இந்தப் பிரச்னை இல்லை. இதற்குத் துறவு மனப்பான்மையோ, ஞானிகளுக்கு வசப்படும் சித்தியோ தேவையில்லை. `ஏன் இதைத் தேவையில்லாம மனசுல தூக்கிக்கிட்டு அலையுறோம்?’ என்று யோசித்தாலே போதும். இதை எளிதாக விளக்குகிறது ஒரு ஜென் கதை.
தங்களுக்கு ஏற்படும் இன்னல்களை, பிரச்னைகளை, கவலைகளை, கஷ்டங்களை முதுகில் சுமந்துகொண்டு அலைந்த மனிதர்களின் கதை அது… நிஜமாகவே! ஜப்பானிலுள்ள ஒரு சிறு மலைக்கிராமம் அது. யார் சொல்லிக் கொடுத்ததோ… அங்கிருந்த எளிய மக்களுக்கு ஒரு பழக்கம் இருந்தது. அன்றைக்கு ஏதோ ஒரு பிரச்னை அவர்களுக்கு ஏற்பட்டால், அதை ஒரு கூழாங்கல்லில் குறிப்பாக எழுதி தங்கள் தோள்பையில் போட்டுக்கொள்வார்கள். அந்தப் பையைத் தோளில் சுமந்துகொண்டே கழனிக்கு வேலைக்குப் போவார்கள்.

அந்த கிராமத்திலிருந்த எல்லோரிடமும் அப்படி ஒரு பை இருந்தது. சிலரிடம் சிறிய பை. சிலரிடம் பெரிய பை. ஆனால், எல்லாவற்றிலும் கூழாங்கற்கள் இருந்தன. அவரவர் கவலைக்கேற்ப அவை நிறைந்திருந்தன. கற்பனை செய்து பாருங்கள்… ஒரு கிராமம், அங்கே மனிதர்கள் கவலைகளைச் சுமந்தபடி நடமாடுகிறார்கள்.
ஒருநாள் மாலை நேரம். வயலிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தார் ஒரு முதியவர். யதேச்சையாக ஆற்றங்கரைப் பக்கம் பார்வையைத் திருப்பினார். அங்கே ஒரு சிறுவன் நின்றுகொண்டிருந்தான். `இங்கே அவன் என்ன செய்கிறான்?’ என்று யோசித்தார் முதியவர். கண்களைத் துடைத்துவிட்டுக்கொண்டு அவனைக் கூர்ந்து பார்த்தார்.
`யார் சுமப்பதற்குத் தயாராக இருக்கிறாரோ, அவர் மேல்தான் கடவுள் அதிக பாரத்தை ஏற்றுகிறார்.’ – அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் ரெக்கி வொயிட் (Reggie White)
சிறுவன் என்ன செய்கிறானென்று அவருக்குப் புலப்படவில்லை. மெதுவாக நடந்து அவனுக்கு அருகே போனார் முதியவர். அவனை அவர் அறிவார். அவனும் அதே கிராமத்தைச் சேர்ந்தவன்தான். அவர் வீட்டிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி அவனுடைய வீடு இருந்தது. சிறுவன், காலுக்கடியில் தன் தோள்பையை வைத்திருந்தான். அதிலிருந்த கூழாங்கற்களை ஒவ்வொன்றாக எடுத்து ஆற்றில் எறிந்துகொண்டிருந்தான். ஒவ்வொரு முறை கல் ஆற்றுநீரில் விழும்போதும் கிளம்பும் `ப்ளக்’ சத்தம் முதியவரை என்னவோ செய்தது.
“நீ என்ன பண்றே… உன்னோட தோள்பை ஏன் இவ்வளவு காலியா இருக்கு… நீ ஏன் எங்களை மாதிரி சுமையைத் தோள்ல மாட்டாம இருக்கே?’’ என்று சத்தமாகக் கேட்டதும்தான், திரும்பி முதியவரைப் பார்த்தான்.

“தாத்தா… நான் தினமும் இந்த இடத்துக்கு வருவேன். அன்னன்னிக்கி என்கிட்ட சேருற எல்லாக் கூழாங்கல்லையும் இப்பிடி ஆத்துல தூக்கிப் போட்டுடுவேன். என்னோட பை காலியாகிடும். கஷ்டங்களையும் பிரச்னைகளையும் இப்பிடி கூழாங்கல்லாக்கிச் சுமக்கறதுல எந்த அர்த்தமும் இருக்கறதா எனக்குப் படலை.’’
சிறுவன் சொன்னதைக் கேட்டு முதியவர் திகைத்துப்போய் நின்றார். கவலைகளும் துயரங்களும் நிறைந்த கனமான ஒரு பையை அவர் வாழ்நாளெல்லாம் சுமந்துகொண்டிருந்தார். தங்களுடைய கஷ்டங்களை இப்படி எளிதாகத் தூக்கி எறியும் ஒருவரைக்கூட அவர் பார்த்ததில்லை.
“நீங்களும் முயற்சி செஞ்சு பார்க்குறீங்களா?’’ என்று கேட்டான் சிறுவன்.
முதியவர் தயங்கினார். ஆனாலும் அது ஒரு நல்ல யோசனையாக அவருக்குப் பட்டது.
`உண்மையில் வாழ்க்கை எளிமையானது. அதைச் சிக்கல்கள் நிறைந்ததாக ஆக்கிக்கொள்வது நாம்தான்.’ – கன்ஃபூசியஸ்.
முதியவர் தன் தோளிலிருந்த பையை வெகு கவனமாகக் கீழே இறக்கிவைக்க முயன்றார். சிறுவன் அவருக்கு உதவினான். பல வருடங்களாக அவர் தன் துயரங்களைச் சிறு சிறு கூழாங்கற்களாக்கி அதில் போட்டுவைத்திருந்தார். பை மிக கனமானதாக, பெரியதாக இருந்தது. முதியவர் அந்தப் பையைப் பிரித்தார். அதற்குள்ளிருந்து உத்தேசமாக ஒரு கல்லை எடுத்தார். அதில் எழுதியிருந்ததைப் படித்தார். பழைய நினைவுகளில் மூழ்கினார். பிறகு அந்தக் கல்லை ஆற்றுநீரை நோக்கித் தன் பலம்கொண்ட மட்டும் வீசியெறிந்தார். சிறுவன் இப்போது அவரைப் பார்த்துச் சிரித்தான். அவரும் சிரித்தார்.

முதியவர் இன்னொரு கல்லைப் பையிலிருந்து எடுத்தார். அதையும் வீசியெறிந்தார். இன்னொன்று… இன்னொன்று… இன்னொன்று… சிறுவன், அவர் கூழாங்கற்களை எடுத்து வீசும்போதெல்லாம் அவரையே கூர்ந்து பார்த்தான். சில நேரங்களில் கைதட்டி ஆரவாரம் செய்தான். இருட்டு தன் வருகையை இந்த பூமிக்கு அறிவப்பதற்கு முன்பாக, பையிலிருந்த மொத்தக் கூழாங்கற்களையும் வீசியெறிந்திருந்தார் முதியவர். பெருமூச்சுவிட்டார். அந்தப் பையிலிருந்த சுமை மட்டுமல்ல… தன் மனதிலிருந்த சுமையும் குறைந்திருந்ததாக அவர் உணர்ந்தார். இப்போது அவரிடம் எந்தக் கவலையும் இல்லை; எந்தப் பிரச்னையும் இல்லை; எந்தத் துயரமும் இல்லை; அவருடைய வாழ்நாள் முழுக்க அவர் அனுபவித்திருந்த அத்தனை கஷ்டங்களும் ஆற்றுநீரில் மூழ்கிப்போயிருந்தன. முதியவர் பையைக் கீழே போட்டுவிட்டு சிறுவனை இறுக அணைத்துக்கொண்டார். ஆனந்த மிகுதியில் அவர் கண்களிலிருந்து கண்ணீர் வந்துகொண்டிருந்தது.
அடுத்த நாள் முதியவரை அந்த கிராம மக்கள் ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள். கனமான மூட்டையைச் சுமந்து சுமந்து கூனிப்போயிருந்த முதுகு இப்போது இல்லை. நிமிர்ந்து நடந்தார். கண்களில் புத்தொளி. முகம் அப்போதுதான் மலர்ந்த பூப்போல இருந்தது. அவரிடம் அவர்கள் என்ன நடந்ததென்று விசாரித்தார்கள். சொன்னார். அவர்கள் வியந்துபோய் அவர்களைப் பார்த்தார்கள்.
அன்று மாலை ஊர்முழுக்க ஆற்றங்கரையில் திரண்டிருந்தது. அவர்களுடன் அந்த முதியவரும் சிறுவனும் நின்றுகொண்டிருந்தார்கள். எல்லோரும் தங்கள் தோள்பையிலிருந்த ஒவ்வொரு கூழாங்கல்லையும் ஆற்றில் தூக்கி எறிந்தார்கள். தங்கள் பைகளிலிருந்த கடைசி கூழாங்கல்லும் தீர்ந்துபோகிற வரை எறிந்தார்கள். இறுதியாக அத்தனை பேரும் நிம்மதியடைந்தார்கள். இத்தனை நாள்களாகச் சுமந்துகொண்டிருந்த அத்தனை துன்பமும் காணாமல்போனதாக உணர்ந்தார்கள். அதற்குப் பிறகு ஒருபோதும் அந்த கிராம மக்கள், தங்கள் துயரங்களை ஒரு பையில் போட்டுவைக்க வேண்டும் என்று எண்ணவேயில்லை!
நம் துயரங்களைத் தூக்கிப்போட ஆறு வேண்டாம். மனமிருந்தால் போதும். சரிதானே?!