சிஏஏவால் இந்திய முஸ்லிம்களின் குடியுரிமை ரத்தாகாது: இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷஹாபுத்தீன் ராஜ்வி கருத்து

புதுடெல்லி: உத்தர பிரதேசம் பரேலியில் அகில இந்திய முஸ்லிம் ஜமாத் (ஏஐஎம்ஜே) கடந்த வருடம் செப்டம்பரில் தொடங்கப்பட்டது. சன்னி முஸ்லிம் பிரிவின் பரேல்வி மதராஸா கொள்கைகளுக்கான முஸ்லிம் அமைப்பான இதன் நிர்வாகத்தில் உ.பி.யிலுள்ள பிரபல பரேலி ஷெரீப் தர்கா உள்ளது.

இந்த அமைப்பு தொடக்கம் முதலே பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு தனது ஆதரவை அளித்து வருகிறது. இதனால், இந்திய முஸ்லிம்கள் இடையே சர்ச்சைக்குரிய அமைப்பாக இது கருதப்படுகிறது. இதன் தேசியத் தலைவரான மவுலானா ஷஹாபுத்தீன் ராஜ்வி சிஏஏ-வுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

மத்திய அரசு அமலாக்கிய சிஏஏ சட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். இதன் மீது இந்திய முஸ்லிம்களுக்கு பலவிதமான அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை அளிக்க எந்தவிதமான சட்டங்களும் நம் நாட்டில் கிடையாது. இந்தியாவின் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் இந்த சட்டத்தினால் எந்தவிதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள். இதை புரிந்துகொள்ளாமல் சிஏஏ மீது முந்தைய நாட்களில் பல போராட்டங்கள் நடைபெற்றன. இதற்கு சில அரசியல் கட்சிகளே காரணம். எனவே, ஒவ்வொரு இந்திய முஸ்லிம்களும் சிஏஏவை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சிஏஏ அமலாவதற்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த சட்டத்தினால் எந்த ஒரு முஸ்லிம்களுக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

ஏனெனில், சிஏஏவில் முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்கும் சட்டப்பிரிவு இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த சட்டமானது பாகிஸ்தான், வங்கதேச நாடுகளில் புறக்கணிக்கப்படும் முஸ்லிம் அல்லாதவர்களை பாதுகாப்பதற்காக அமலாக்கப்படுவதாகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.

ஆனால், இந்த கருத்துக்கு முஸ்லிம்கள் இடையே நம்பிக்கை ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில், முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் உ.பி. மாநிலத்தின் முஸ்லிம் அமைப்பான ஏஐஎம்ஜேவிடமிருந்து ஆதரவு எழுந்துள்ளது.

கடந்த 2019-ல் பாஜக தலைமையிலான மத்திய அரசால் சிஏஏ சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இது குடியரசுத் தலைவர்ஒப்புதலுடன் சட்டமான பின், அதற்கான அறிவிக்கை நேற்று முன்தினம் வெளியானது. இந்த சட்டம் மூலம், டிச.31, 2014-க்கு முன்பாக, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வந்த இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் பலனடைய உள்ள னர். இந்தப் பலன் அவர்களை போல் இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அளிக்கப்படாதது சர்ச்சையாகி வருகிறது.

இதுபோன்றவர்கள் இந்தியாவின் குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியாணா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.