`எனக்கு ஏன் இந்தப் பேர் வெச்சீங்கனு பெற்றோர்கிட்ட கேட்டதுதான் ஆரம்பம்’ -`கலை வளர்மணி’ யாழினி

“சங்கீதத்தின் உயிர்நாடியாகவும், நரம்பு வாத்தியமாகவும் விளங்குவதுதான் வீணை. வீணையை உற்பத்தி செய்வதும் சரி, பயில்வதும் சரி கடினமானதே. வீணை, ஆய கலைகள் அறுபத்து நான்கிற்கும் அதிபதியாய் விளங்கும் சரஸ்வதி தேவியின் திருக்கரங்களில் தவழும் உன்னத வாத்தியம். தமிழ் இலக்கியங்களிலும், பண்டைய சிற்பக்கலையிலும், ஓவியக்கலையிலும், அதிமுக்கிய வாத்தியமாக விளங்குவது வீணைதான்’’ – விரல்களில் மட்டுமல்ல, நாவிலும் வீணைதான் யாழினிக்கு.

ஆன்மிக சொற்பொழிவில் யாழினி

திருவாரூரில் நடந்து முடிந்த புத்தகக் கண்காட்சியில் திருவாரூரை சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி யாழினிக்கு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் ‘கலை வளர்மணி விருது’ மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீயால் வழங்கப்பட்டது. இயல், இசை நாடகக் கலைகளில் சிறந்து விளங்கும் 19 முதல் 35 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை பண்பாட்டு துறையால் ‘கலை வளர்மணி’ விருது வழங்கப்படுகிறது.

விருதைப் பெற்றுள்ள யாழினி நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயோமெடிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீணை வாசித்துக் கொண்டிருக்கிறார். விருது பெற்றதற்காக வாழ்த்துகளைத் தெரிவித்துப் பேசத் தொடங்கினோம்.

கலை விருது பெற்ற தருணம்

“எங்க குடும்பத்துல நான்தான் முதல் தலைமுறையாக வீணை வாசிக்கிறேன். எனக்கு யாழினின்னு ஏன் பெயர் வெச்சீங்கன்னு ஒருமுறை அம்மா, அப்பாகிட்ட கேட்டேன். அப்பதான், யாழ்னா ஒரு இசைக்கருவி, யாழினின்னா இனிமையான குரலையுடையவள் அப்படின்னு சொன்னாங்க. என் பெயர்லயே இசை இருக்கு!

எனக்கு யாழ் வாசிக்கக் கத்துக்கணும்னு சொன்னேன். ’யாழ் கருவி இப்போ அதிகமா பயன்பாட்டுல இல்ல. யாழ் மாதிரியே வீணையும் நரம்பு வாத்தியம்தான். அதை கத்துக்குறியா?’னு கேட்டாங்க. தஞ்சாவூர்ல வீணை செய்ற இடத்துக்குக் கூட்டிட்டு போயிட்டு, அதை தயார் பண்றதையும் காமிச்சாங்க.

வீணை இசைக் கலைஞர் யாழினி

என்னோட 9-வது பர்த்டேக்கு வீணை கிளாஸ்ல சேர்த்துவிட்டாங்க. என் குரு பஞ்சவர்ணம், சின்ன சின்ன விஷயங்களையும் ரொம்ப அக்கறையா கத்துக் கொடுத்தாங்க. 10-வது படிச்சப்போ, மத்திய அரசு நிறுவனத்தின் சார்பில் ‘நேஷனல் யூத் ஃபெஸ்டிவல்’ நடத்துனாங்க. அதுதான் நான் கலந்துகிட்ட முதல் போட்டி. மாவட்ட, மாநில அளவில வெற்றி பெற்றேன்.

தேசிய அளவிலான போட்டியில கலந்துகிட்டு 4-வது இடம் கிடைச்சது. அதுக்கப்புறம் மேடைக் கச்சேரிகள், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள்னு தொடர்ந்து வீணை வாசிச்சிட்டே இருக்கேன். ‘கலை வளர்மணி’ விருதுக்கு விண்ணப்பிச்ச பிறகு, ஒரு நாள் கலை பண்பாட்டுத் துறையில இருந்து கடிதம் வந்துச்சு.

வீணை இசைக் கலைஞர் யாழினி

கடிதத்துல, நான் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கேன்னு போட்டிருந்ததை பார்த்து அப்படியே சர்ப்ரைஸ் ஆயிட்டேன். ஒரு விஷயத்தை நாம ரொம்ப பிடிச்சு பண்ணினா, அதோட ரிசல்ட் வேற லெவல்ல இருக்கும். ஒரு விஷயத்தை நாம நேசிச்சுப் பண்ணும்போது அதுவே நிறைய வாய்ப்புகளையும் உருவாக்கித் தரும்.

எங்க குடும்பத்துல எனக்குன்னு செலவு செய்யறதுதான் அதிகம். நான் கேக்காமலேயே எனக்கு என்ன தேவையோ அதை என் அப்பா, அம்மா வாங்கி கொடுத்துடுவாங்க. அப்படி நான் கேட்காமலே கிடைச்சதுதான், என்னோட இரண்டாவது வீணை. பழைய வீணை வாங்கி கிட்டத்தட்ட ஒன்பது வருஷமாச்சு. அதனால, கச்சேரிக்கு எடுத்துட்டுப் போறதுக்கு வசதியா இல்ல. சர்ப்ரைஸா ஒரு பிறந்தநாளுக்கு எலெக்ட்ரிக் வீணை வாங்கிக் கொடுத்தாங்க.

வீணை இசைக் கலைஞர் யாழினி

இந்த விருது கிடைச்சதுல என்னைவிட என் குடும்பத்துக்குத்தான் ரொம்ப சந்தோஷம். தேசிய அளவிலான போட்டிகள்ல கலந்துகிட்டு ஜெயிக்கணும். வீணையைக் கத்துக்கொடுக்க ஒரு இன்ஸ்டிடியூட் தொடங்கணும். இதான் என்னோட ஆசை” என்கிறார் யாழினி.

கனவுகள் மெய்ப்படட்டும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.