“எனக்கு விஜய பிரபாகரன் ஒரு மகன் போன்றவர்” – ராதிகா சரத்குமார் @ சிவகாசி

விருதுநகர்: விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரன் தனக்கு மகன் போன்றவர் என்று பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூரில் பாஜக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று (மார்ச் 24) நடைபெற்றது. இதில் பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்து, விருதுநகர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் நடிகை ராதிகாவை அறிமுகம் செய்துவைத்தார். அவருடன் அவரது கணவரும் நடிகருமான சரத்குமாரும் உடனிருந்தார்.

வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா பேசுகையில், “பாரதிய ஜனதா கட்சியினரின் ஆர்வத்தையும் வெறியையும் பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது. பணியாற்றுபவர்களை மரியாதையாக நடத்தக்கூடிய கட்சி பாரதிய ஜனதா கட்சி. சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும், பெண்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும், தன்னம்பிக்கை இருக்க வேண்டும், சுயமரியாதையோடு வாழ வேண்டும். வேலை வாய்ப்பு இருக்க வேண்டும். அதற்கு ஒரே நம்பிக்கை மோடி தான்.

நான் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்தவள். உழைப்பு மட்டுமே என் வாழ்வில் எனக்கு துரோகம் செய்யாதது. உழைப்பு அனைவருக்கும் பலமாக இருக்கும்.‌ ‘சூரியவம்சம்’ படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்துக் கொடுத்து நீ‌ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன் என ஒரு தூண் போல் இல்லாமல் ஒரு ஆலமரமாக நிற்கிறார்.

விருதுநகர் தொகுதியில் எந்த பிரச்சினை வந்தாலும் நான் நாட்டாமையை (சரத்குமாரை) கூப்பிடுவேன். அவர் பார்த்துக்கொள்வார்” என்று ராதிகா பேசினார்.

அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “10 ஆண்டுகளில் மோடி செய்துள்ளதை மக்களிடம் எடுத்துச் சொன்னாலே போதும். இதுவே மிகப்பெரிய மாற்றத்தை உருவக்கும். பாஜகவை வலுப்படுத்தும். விருதுநகரில் கிடப்பில் போடப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் முடிப்போம்.

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வோம். தேர்தலில் பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் உள்ளது. அதை நாமும் கண்காணிக்க வேண்டும். பாஜகவுன் இணைந்ததில் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் பலருக்கும் உடன்பாடு உள்ளது. என உடன் இருப்பவர்கள் யாரும் அதிருப்தியடையவில்லை. நல்ல ஆட்சி மத்தியில் இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் எங்களுக்கு உள்ளது.

இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நிற்கும் மாணிக்கம் தாகூர் இந்த தொகுதிக்கே பெரும்பாலும் வருவதில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். விஜயகாந்தின் மகன் எனக்கும் ஒரு மகன் போன்றவர். அவர் எனது மகளுடன் படித்தவர். அவர் நன்றாக இருக்க வேண்டும்.

எல்லோருக்கும் வேலைவாய்ப்பும் பாதுகாப்பும் இருக்க வேண்டும். சிவகாசி பட்டாசு தொழிலில் இனிமேல் ஒரு உயிரிழப்பும் இருக்கக் கூடாது. அதற்கான திட்டப் பணிகளை முன்னெடுப்போம்” என்று ராதிகா கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.