PBKS vs SRH IPL2024: பரபரப்பான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வெற்றி!

முல்தான்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் கிங்ஸ் அணி 183 ரன்கள் இலக்கை நோக்கி கடைசி பந்துவரை போராடியது. இருப்பினும் சன்ரைசர்ஸ் அணி சிறப்பாக பந்துவீசி வெற்றியை வசமாக்கியது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியில் அர்ஷ்தீப் சிங் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாம்கரன் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் குவித்தது. இதற்கு மிக முக்கிய காரணம் சன்ரைசர்ஸ் அணியின் நிதீஷ் குமார் ரெட்டி தான்.

மிடில் ஆர்டரில் களமிறங்கிய அவர் 37 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் விளாசினார் நிதீஷ் ரெட்டி. அவருக்கு பக்கபலமாக அப்துல் சமத் 12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரின் ஆட்டமே சன்ரைசர்ஸ் அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றது. இதனையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேப்டன் ஷிகர் தவான், பேரிஸ்டோவ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியை கொடுத்தனர்.  அவர்கள் ஓப்பனிங்கில் ஒரளவு ரன்கள் அடித்திருந்தால் இப்போட்டியை வெற்றி பெற்றிருகக்கூட வாய்ப்பு இருந்தது.

ஆனால் பஞ்சாப் அணியில் டாப் 3 பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய சாம்கரண், சிங்கந்தர் ராசா முறையே 28, 29 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். இதனையடுத்து களம் புகுந்த ஷஷாங் சிங், ஜிதேஷ் சர்மா, அஷூதோஷ் சர்மா ஆகியோர் அதிரடியாக ஆட பஞ்சாப் அணி வெற்றிக்கு மிக அருகில் சென்றது. இருப்பினும் அந்த அணியால் 183 என்ற வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை, கடைசி வரை களத்தில் இருந்த ஷஷாங் 25 பந்துகளில் 46 ரன்களும், அஷூதோஷ் 15 பந்துகளில் 33 ரன்களும் விளாசினர். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுக்க, இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியலில் சன்ரைசர்ஸ் அணி 5வது இடத்துக்கு முன்னேறியது. பஞ்சாப் கிங்ஸ் அணி 6வது இடத்தில் இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.